இயற்கை பேரிடர்களை சமாளிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் -அமைச்சர் ஷாஜகான் வேண்டுகோள்


இயற்கை பேரிடர்களை சமாளிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் -அமைச்சர் ஷாஜகான் வேண்டுகோள்
x
தினத்தந்தி 30 April 2019 4:45 AM IST (Updated: 30 April 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை பேரிடர்களை சமாளிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் ஷாஜகான் வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி,

வங்க கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி புதுச்சேரி பகுதிகளில் கடக்கக்கூடும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து புதுச்சேரிக்கு அதி தீவிர மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பானி புயலை எதிர்கொள்ள புதுவை அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கிடையே பானி புயல் திசை மாறி செல்வதால் புதுச்சேரிக்கு பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் ஷாஜகான் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அருண், நகராட்சி ஆணையர்கள் அர்ஜூன் ராமகிருஷ்ணன், கந்தசாமி, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா மற்றும் பொதுப்பணித்துறை, மின்துறை, தீயணைப்புத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் ஷாஜகான் பேசுகையில், ‘பானி புயலை எதிர்கொள்ள அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டது. தற்போது புயலால் பாதிப்பு இருக்காது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலை எதிர்கொள்ள அரசு அதிகாரிகள் மேற்கொண்ட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். வருங்காலத்தில் இதுபோன்ற இயற்கை பேரிடர்களை மேற்கொள்ள அனைவரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்’ என்றார்.


Next Story