தொடர் மழையால் வனப்பகுதி பசுமைக்கு திரும்பியது, முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
தொடர் மழை காரணமாக வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளதால், முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அவற்றை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
கூடலூர்,
கூடலூர், முதுமலை பகுதியில் கடந்த 2 மாதங்களாக கடும் வறட்சி காணப்பட்டது. இதனால் பல நூறு ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி காட்டுத்தீயில் எரிந்து நாசமானது. மேலும் வனப்பகுதியில் புற்கள் கருகியது. நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டது. இதனால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தை விட்டு காட்டுயானைகள் அதிகளவு வெளியேறி கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தின.
வறட்சியின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்ததால் பொதுமக்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கோடை மழையை எதிர்பார்த்து பொதுமக்கள், விவசாயிகள் இருந்தனர். கடந்த மாதம் பெய்ய வேண்டிய கோடை மழை மிகவும் காலதாமதமாக தற்போது பெய்து வருகிறது. இதனால் கூடலூர், முதுமலை வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது. கடந்த காலங்களில் கருகி கிடந்த பகுதிகளில் பச்சை பசேல் என புற்கள் வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கிறது.
இதுதவிர முதுமலை வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளிலும் பரவலாக தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனமும், குடிநீரும் போதிய அளவு கிடைத்து வருகிறது. இதனால் காட்டுயானைகள், மான்கள், காட்டெருமைகள், மயில்கள், சிறுத்தைப்புலிகள், கரடிகள் என வனவிலங்குகள் நடமாட்டம் கடந்த 2 வாரமாக அதிகரித்து உள்ளது.
தினமும் மாலை நேரத்தில் காட்டுயானைகள் கூட்டமாக கூடலூர்- தெப்பக்காடு சாலையை கடந்து மாயார் ஆற்றில் தண்ணீர் குடிப்பதற்காக செல்வதை காண முடிகிறது. இதேபோல் கரடிகள், சிறுத்தைப்புலிகள் சாலையை கடந்து செல்வதை அடிக்கடி காண முடிகிறது. இதற்கு இணையாக மான்கள் கூட்டமாக பச்சை புல்வெளிகளில் நின்று மேய்கிறது. தற்போது குளு,குளு சீசன் நிலவுவதால் சுற்றுலா பயணிகளும் வனவிலங்குகளை கண்டு வெகுவாக ரசிக்கின்றனர். பல இடங்களில் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என வனத்துறையினரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கடந்த காலங்களில் வறட்சியால் காட்டுத்தீ வனப்பகுதியில் பரவியது. மேலும் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வனப்பகுதியில் உள்ள குட்டை, தொட்டிகளில் நிரப்பப்பட்டு வந்தது. கோடை மழை தாமதமாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்ததால் வனப்பகுதியில் பசுமை திரும்பி உள்ளது. மேலும் நீர்நிலைகளிலும் தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் வேறு இடங்களுக்கு சென்று இருந்த வனவிலங்குகளும் முதுமலைக்கு திரும்பி உள்ளன.
சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் வனவிலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். ஆனால் வனவிலங்குகள் அருகே சென்று புகைப்படங்கள் எடுத்தல், இடையூறு செய்தல் கூடாது. வனவிலங்குகள் திடீரென தாக்கும் தன்மை உடையவை. சமவெளி பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதை கவனத்தில் கொள்வது இல்லை. எனவே வனப்பகுதியில் செல்லும்போது சாலையில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுக்கக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story