முதுமலை வனப்பகுதியில் விடப்பட்ட விநாயகன் யானையின் கழுத்தில் ரேடியோ காலரை காணவில்லை - வனத்துறையினர் அதிர்ச்சி


முதுமலை வனப்பகுதியில் விடப்பட்ட விநாயகன் யானையின் கழுத்தில் ரேடியோ காலரை காணவில்லை - வனத்துறையினர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 30 April 2019 4:41 AM IST (Updated: 30 April 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை வனப்பகுதியில் விடப்பட்ட விநாயகன் யானையின் கழுத்தில் இருந்த ரேடியோ காலரை காணவில்லை. இதனால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மசினகுடி,

கோவை மாவட்டம் சின்னதடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகன் என்று பெயரிடப்பட்ட காட்டுயானை அட்டகாசம் செய்து வந்தது. இந்த விநாயகன் யானையை கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் அதன் கழுத்தில் ரேடியோ காலர் என்ற நவீன கண்காணிப்பு கருவியை பொருத்தி, முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து விநாயகன் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். நாளடைவில் கண்காணிப்பு பணியை வனத்துறையினர் கைவிட்டு விட்டதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் ஆரம்பத்தில் கர்நாடக வனப்பகுதிக்குள் சென்று சுற்றித்திரிந்த விநாயகன் யானை, தற்போது முதுமலை வனப்பகுதிக்கு திரும்பி உள்ளது. குறிப்பாக பொதுமக்களின் குடியிருப்புகள் உள்ள பகுதிக்கு அருகில் முகாமிட்டு இருக்கிறது. மேலும் விளைநிலங்களுக்குள் தினமும் புகுந்து பயிர்களை நாசம் செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் முதுமலை மக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதற்கிடையே விநாயகன் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டு இருந்த ரேடியோ காலரை காணவில்லை. இதனால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

அந்த கருவியின் விலை ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. விநாயகன் யானையின் கழுத்தில் இருந்து ரேடியோ காலர் மாயமானது எப்படி?, வனப்பகுதிகளுக்குள் எங்கேயும் விழுந்து கிடக்கிறதா? என்பது தெரியவில்லை. மேலும் அந்த கருவியில் இருந்து எந்தவொரு சிக்னலும் கட்டுப்பாட்டு அறைக்கு வரவில்லை. இதனால் முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர்.

Next Story