குடிநீர் தொட்டியை சேதப்படுத்திய வாலிபர் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் தொட்டியை சேதப்படுத்திய வாலிபர் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 April 2019 3:45 AM IST (Updated: 30 April 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே குடிநீர் தொட்டியை சேதப்படுத்திய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெய்க்காரப்பட்டி,

பழனி அருகே ஆர்.அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது சின்னாக்கவுண்டன்புதூர் கிராமம். இங்கு சுமார் 130 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மது அருந்திவிட்டு, கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமாரிடம் புகார் செய்தனர். மேலும் பழனி தாலுகா போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த வாலிபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி ஆண்கள், பெண்கள் என சுமார் 50 பேர் நேற்று மதியம் 12 மணியளவில் சின்னாக்கவுண்டன்புதூரில், பழனி-கொழுமம் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

இதற்கிடையே மறியல் குறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பழனி தாலுகா போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்பின்னரே பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story