கோவில் திருவிழாவின்போது தாக்கியவர்களை கைது செய்யக்கோரி - போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
கோவில் திருவிழாவின்போது தங்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கோத்தகிரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் இருந்து கோடநாடு காட்சிமுனைக்கு செல்லும் சாலையோரத்தில் எஸ்.கைகாட்டி உள்ளது. இங்குள்ள அம்மன் நகரில் முத்துமாரியம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் எஸ்.கைகாட்டி கடைவீதியில் திருவிழாவை நிறைவு செய்துவிட்டு, பொதுமக்கள் அம்மன் நகருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சன்ஷைன் நகரை சேர்ந்த சிலர், அவர்களிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அம்மன் நகரை சேர்ந்த சரவணமணி, சுப்ரமணியம், சண்முகம், செல்வகுமார் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவருக்கும் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த தாக்குதலை கண்டித்து அம்மன் நகர் பொதுமக்கள் இரவு 9.45 மணிக்கு எஸ்.கைகாட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தினர். அதன்பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை அம்மன் நகரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில், கோவில் திருவிழாவின்போது தங்களை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். மேலும் அவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நடக்கும் சம்பவங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த பத்திரிகையாளர்களை போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Related Tags :
Next Story