சிறப்பு மலை ரெயிலில் செல்ல அலைமோதும் கூட்டம் - தினமும் 3 முறை இயக்க ஏற்பாடு


சிறப்பு மலை ரெயிலில் செல்ல அலைமோதும் கூட்டம் - தினமும் 3 முறை இயக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 30 April 2019 3:45 AM IST (Updated: 30 April 2019 5:17 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி-கேத்தி இடையே இயக்கப்படும் சிறப்பு மலை ரெயிலில் செல்ல கூட்டம் அலைமோதுகிறது. இதையொட்டி தினமும் 3 முறை மலை ரெயிலை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நடைபெறுகிறது. இந்த சீசனை அனுபவிக்க கோடை வாசஸ்தலமான ஊட்டிக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் மனதில் மலை ரெயிலில் ஒருமுறையாவது பயணிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.

ஊட்டி-குன்னூர், ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரெயில்களில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கோடை சீசனையொட்டி ஊட்டி-கேத்தி இடையே ‘ஜாய் ரைடு‘ என்ற பெயரில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.

இதற்கிடையே மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சிறப்பு மலை ரெயிலில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக ஊட்டிக்கு புதியதாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சிறப்பு மலை ரெயிலை தினமும் 3 முறை இயக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

அதன்படி நேற்று முதல் கோடை சீசன் முடியும் வரை ஊட்டி-கேத்தி இடையே தினமும் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் சென்னை ஐ.சி.எப்.-ல் புதியதாக தயாரிக்கப்பட்ட 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த பெட்டிகளில் கதவுகள் அகலமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சுற்றுலா பயணிகளுக்கு சொகுசு இருக்கைகளும் உள்ளது. ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து லவ்டேல் வழியாக கேத்தி ரெயில் நிலையத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர். அவர்கள் ரெயில் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தார்கள்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, கோடை விடுமுறையையொட்டி சுற்றி பார்ப்பதற்காக ஊட்டிக்கு வந்தோம். மலை ரெயிலில் பயணம் செய்ய வேண்டும் என்று குழந்தைகள் அதிகளவில் விரும்புகின்றனர். இதனால் மலை ரெயிலில் பயணிக்க ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றோம். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. தற்போது கூடுதல் முறை இயங்கி வரும் சிறப்பு மலை ரெயிலில் டிக்கெட் எடுத்து பயணம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பயணத்தை நாங்கள் மறக்க மாட்டோம் என்றனர்.

தினமும் காலை 9.40, காலை 11.30, மாலை 3 மணிக்கு ஊட்டியில் இருந்து சிறப்பு மலைரெயில் கேத்திக்கு புறப்படும். மறுமார்க்கமாக கேத்தியில் இருந்து காலை 10.30, மதியம் 12.40, மாலை 4 மணிக்கு ஊட்டிக்கு புறப்படும். இந்த சிறப்பு மலை ரெயிலில் 146 இருக்கைகள் உள்ளன. முதல் வகுப்பில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.400, 2-வது வகுப்புக்கு ரூ.300-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத் திருந்தனர். 

Next Story