கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி வியாபாரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வியாபாரி தனது குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அவருடைய ஆடுகள் பக்கத்து வீட்டில் மேய்ந்ததால் அதிகாரிகள் மிரட்டுவதாகவும் அவர் புகார் தெரிவித்து உள்ளார்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. எனினும் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருப்பர்.
ஆனால் நேற்று காலையில் பாதுகாப்புக்காக போலீசார் யாரும் நிறுத்தப்படவில்லை. இந்த நிலையில் காலை 10 மணியளவில் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர் அவர் சிறிது நேரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கும், இங்கும் சுற்றிக்கொண்டு இருந்தார்.
பிறகு காலை 10.30 மணியளவில் திடீரென்று அவர் தனது மனைவி, மகள்களுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே சென்றார். அத்துடன் அவர் தனது கையில் வைத்திருந்த 5 லிட்டர் கேனில் இருந்த பெட்ரோலை தனது மீதும், தனது மனைவி மற்றும் மகள்கள் மீதும் வேகமாக ஊற்றினார். பின்னர் தனது கையில் இருந்த தீப்பெட்டியை எடுத்து பற்ற வைக்க முயற்சி செய்தார்.
இதை பார்த்ததும் கலெக்டர் அலுவலகத்தில் நின்றிருந்தவர்கள் ஓடிச்சென்று அவருடைய கையில் இருந்த தீப்பெட்டியை பறித்தனர். மேலும் அவர்கள் 4 பேரையும் மீட்டு, தண்ணீரை எடுத்து அவர்கள் மீது ஊற்றினார்கள். இதனால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர். எனினும் சிறிது நேரம் கழித்து அந்த நபரின் மகள்கள் 2 பேரும் பெட்ரோலின் எரிச்சல் தாங்க முடி யாமல் அலறினார்கள்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் அந்த வளாகத்தில் இருக்கும் கழிவறைக்கு அழைத்துச்சென்று, குளிக்க வைத்தனர். அதுபோன்று அந்த நபரின் மனைவியையும் அவர்கள் குளிக்க வைத்தனர். பின்னர் அவர்களுக்கு வேறு துணிகளை அணிய கொடுத்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் தாமதமாக அங்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் கோவை சேரன்மாநகரை சேர்ந்த செல்வராஜ் (வயது 48) என்பதும், தனது மனைவி சாந்தி (42), மகள்கள் சிவகாமி சுந்தரி (15), தரணி (11) ஆகியோருடன் வந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார்.
எதற்காக தற்கொலைக்கு முயற்சி செய்தீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு, தான் சோப்பு வியாபாரம் செய்து வருவதாகவும், தனது வீட்டில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருவதாகவும், அந்த ஆடுகள் அருகே உள்ள வீட்டிற்குள் சென்று மேய்ந்ததால், அவர் மிரட்டுவதாகவும், அத்துடன் மாநகராட்சி அதிகாரிகளும் மிரட்டுவதால் வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார்.
பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீசார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். செல்வராஜின் வீடு சேரன்மாநகர் என்பதால் அது பீளமேடு போலீஸ் நிலைய எல்லைக்குள் வருகிறது. இதனால் இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் செல்வராஜின் பக்கத்து வீட்டு நபரை அழைத்து விசாரணை நடத்தினார்கள். இனிமேல் இதுபோன்று மிரட்டக் கூடாது என்றும், அவ்வாறு மிரட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். அதுபோன்று செல்வராஜிடம் இதுபோன்று பொது இடத்தில் நடந்து கொள்ளக்கூடாது என்று அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செல்வராஜ் கூறியதாவது:-
நான் சோப்பு வியாபாரம் செய்து வருவதால், காலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில்தான் வீடு திரும்புவேன். எனது வீட்டின் அருகே கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு ஒருவர் வீடு கட்டினார். அவருடைய வீட்டில் எனது ஆடுகள் சென்று மேய்ந்து உள்ளன. இது தொடர்பாக அவர் எங்கள் வீட்டிற்கு வந்து நான் வீட்டில் இல்லாத போது மனைவி மற்றும் மகள்களை மிரட்டி உள்ளார். அத்துடன் மாநகராட்சி அதிகாரிகளும் வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்து உள்ளனர்.
நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக அங்கு குடியிருந்து வருகிறோம். ஆடுகள் வளர்க்க வேண்டும் என்றால் காட்டில் சென்று தங்குங்கள் என்றும் எங்கள் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் மிரட்டி உள்ளனர். அதிகாரிகளே மிரட்டும்போது நாங்கள் எங்கு சென்று புகார் செய்வது? எனவேதான் நாங்கள் வேறுவழியின்றி தற்கொலை செய்ய முடிவு செய்து கலெக்டர் அலுவலகம் வந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து செல்பவர்கள் கூறியதாவது:-
கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். அங்கு வருபவர்கள் திடீரென்று இதுபோன்று தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுகிறார்கள். இது வாடிக்கையாக நடந்து வருகிறது. திங்கட்கிழமை தோறும் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஆனால் நேற்று போலீசார் யாரும் அங்கு இல்லை. இந்த சம்பவம் நடந்து முடிந்து அரை மணி நேரம் கழித்துதான் வந்து உள்ளனர்.
எனவே இதுபோன்ற சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடப்பதை தடுக்க தினமும் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். அத்துடன் இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் யாரும் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வரமாட்டார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story