பென்னாகரம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் அலுவலகத்தில் சுங்க அதிகாரிகள் திடீர் சோதனை


பென்னாகரம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் அலுவலகத்தில் சுங்க அதிகாரிகள் திடீர் சோதனை
x
தினத்தந்தி 30 April 2019 11:00 PM GMT (Updated: 30 April 2019 8:02 PM GMT)

பென்னாகரம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் டி.ஆர்.அன்பழகன் அலுவலகத்தில் சுங்கவரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சேவை வரி தொடர்பான ஆவணங்களை அவர்கள் ஆய்வு செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பால்வள தலைவராக இருப்பவர் டி.ஆர்.அன்பழகன். இவர் அ.தி.மு.க. விவசாய அணி மாநில தலைவராக உள்ளார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தாளப்பள்ளம் கிராமத்தில் டி.ஆர்.அன்பழகன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். டி.ஆர்.அன்பழகன் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் மூலம் பல்வேறு ஒப்பந்த பணிகளையும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று திருச்சியை சேர்ந்த சுங்கவரித் துறை அதிகாரி ரவீந்திரநாத் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் தாளப்பள்ளத்தில் உள்ள டி.ஆர்.அன்பழகனின் நிறுவன அலுவலகத்திற்கு திடீரென வந்தனர். அந்த அலுவலகத்திற்குள் சென்ற சுங்க அதிகாரிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை பார்வையிட்டு சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின்போது, ஒப்பந்த பணிகளை மேற்கொள்வதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பான ரசீதுகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை பார்வையிட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக டி.ஆர்.அன்பழகனிடமும் அவர்கள் விசாரணை நடத்தினார்கள். ஒப்பந்த பணிகளை எடுத்து செய்வதால் அரசுக்கு செலுத்த வேண்டிய சேவை வரி முறையாக செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவதை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. சுமார் 4 மணிநேரம் தொடர்ந்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் சில ஆவணங்களை எடுத்து சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க. பிரமுகர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட இந்த திடீர் சோதனை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக டி.ஆர்.அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், சுங்க வரித்துறை சார்பில் சேவை வரி செலுத்துவது தொடர்பான விவரங்களை எங்கள் நிறுவனத்திடம் கேட்டிருந்தனர். அதற்கான பதிலை ஓசூரில் உள்ள அலுவலகத்திற்கு முறையாக அனுப்பி விட்டோம். ஆனால் திருச்சி அலுவலகத்திற்கு உரிய விவரங்கள் இன்னும் சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது. இங்கு விசாரணைக்கு வந்த அதிகாரிகளிடம் உரிய விவரங்களை தெரிவித்து உள்ளேன், என்று கூறினார்.

Next Story