வாகன சோதனையின் போது வாலிபர் படுகாயம்: போலீசாரை கண்டித்து சாலை மறியல் திருவாரூரில் பரபரப்பு


வாகன சோதனையின் போது வாலிபர் படுகாயம்: போலீசாரை கண்டித்து சாலை மறியல் திருவாரூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 1 May 2019 4:00 AM IST (Updated: 1 May 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் வாகன சோதனையின் போது வாலிபர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனால் போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் ஹரிஹரன்(வயது19). இவருடை உறவினர் ஆசைத்தம்பி கச்சனம் சாலையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால் அவரை ஆம்புலன்சில் ஏற்றி திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது ஆம்புலன்ஸ் வாகனத்தை தொடர்ந்து ஹரிஹரன் தனது மோட்டார் சைக்கிளில் திருவாரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

திருவாரூர் அருகே கூடூர் காட்டாறு பாலம் அருகே ஹரிஹரன் வந்த போது அப்பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் ஹரிஹரனை மறித்தனர். இதனால் நிலை தடுமாறிய அவர் வேகத்தடையில் மோதி கீே-ழு விழுந்து படுகாயமடைந்தார். உடனே அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். மேலும் காயமடைந்த வாலிபரை மீட்டு அதே ஆம்புலன்சில் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேச்சுவார்த்தை

இந்தநிலையில் போலீசார் மறித்ததால் தான் ஹரிஹரன் கீழே விழுந்து காயமடைந்தார் என கூறி போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸ் அதிகாரிகள் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

Next Story