தஞ்சை அருகே வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்


தஞ்சை அருகே வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 April 2019 11:00 PM GMT (Updated: 30 April 2019 9:06 PM GMT)

தஞ்சை அருகே வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 7 மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த பள்ளிஅக்ரஹாரம்- கூடலூர் சாலையில் வெண்ணாற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் திருடுவதாக தஞ்சை தாசில்தார் அருணகிரிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிகள், உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்றனர்.

அப்போது பள்ளிஅக்ர ஹாரம்- கூடலூர் சாலையில் வெண்ணாற்றின் கரையில் 2 மாட்டு வண்டிகள் மணல் அள்ளிக்கொண்டு வந்தது. அந்த வண்டிகளை தடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்திய போது ஆற்றில் அனுமதியின்றி அள்ளி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 2 வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களிடம் விசாரித்த போது மேலும் 5 வண்டிகளில் ஆற்றில் மணல் அள்ளுவது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆற்றுக்குள் இறங்கி சென்றனர். அதிகாரிகளை பார்த்ததும், மாட்டு வண்டி உரிமையாளர்கள் வண்டியை அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டனர்.

இதையடுத்து தாசில்தார் அருணகிரி, கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர்களை அழைத்து மாட்டு வண்டிகளை எடுத்து வருமாறு உத்தரவிட்டார். மேலும் இது குறித்து தஞ்சை கிழக்குப்போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு 7 மாட்டு வண்டிகள் தஞ்சை கிழக்குப்போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Next Story