கொளுத்தும் கோடையிலும் ஏரி வற்றவில்லை சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம்


கொளுத்தும் கோடையிலும் ஏரி வற்றவில்லை சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
x
தினத்தந்தி 30 April 2019 10:30 PM GMT (Updated: 30 April 2019 9:37 PM GMT)

கோடையிலும் ஏரி வற்றாததால், வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்கிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு அருகே வெள்ளோட்டில் பறவைகள் சரணாலயம் உள்ளது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள இந்த சரணாலயம், பறவைகளின் வாழ்விடமாக காணப்படுகிறது. சீசன்போது இனப்பெருக்கத்திற்காக வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பறவைகள் வந்து செல்வதுண்டு. இதனால் இயற்கை எழில் மிகு அமைப்புடன் சரணாலயம் திகழ்கிறது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை கண்டுகளிக்க காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த சரணாலயத்துக்கு மழை பெய்யும்போதும், கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும்போதும் நீர்வரத்து ஏற்படுகிறது. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் அதன் கசிவுநீர் பறவைகள் சரணாலயத்துக்கு வந்தது. தற்போது சரணாலயம் முழுவதும் தண்ணீரால் நிரம்பி காணப்படுகிறது.

ஆங்காங்கே உள்ள மரங்களின் கிளைகளில் ஏராளமான பறவைகள் தங்கியுள்ளன. அந்த பறவைகள் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டமாக பறந்து செல்வதை பார்க்க ரம்மியமாக காட்சி தருகிறது. அதேபோல் தண்ணீரில் மீன்களை பிடித்து சாப்பிடும் காட்சியையும் நேரில் கண்டு ரசிக்க முடிகிறது.

பெரிய நீர் காகம், சிறிய நீர் காகம், பாம்பு தாரா, ஆமைக்கோழி, நீளவாழ் இலைக்கோழி, கொசுஉள்ளான், நாரை, சாம்பல் நாரை, அழகுபுள்ளி மூக்கு வாத்து போன்ற பறவைகள் காணப்படுகிறது. வண்ணநாரை, குருட்டு கொக்கு, சாம்பல் நாரை, ஆள்காட்டி பறவை ஆகியன சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளன.

விரால் அடிப்பான், வல்லூறு, கவுதாரி, கொண்டைக்குயில், கூகை ஆந்தை, பெரிய செம்பகம், புள்ளிச்சிறு ஆந்தை, சிறிய நீல மீன்கொத்தி, தூக்கனாங்குருவி, மாங்குயில், அரசவால் ஈப்பிடிப்பான் என 100–க்கும் மேற்பட்ட வகை பறவைகள் கண்களுக்கு விருந்தாக காட்சி தருகிறது.

பறவைகளின் கீச் குரலை கேட்கவும் இனிமையாக உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் சுற்றுலா பயணிகளும் பலர் பறவைகள் சரணாலயத்துக்கு வந்து செல்கிறார்கள். அவர்கள் பறவைகளை ரசித்து பார்ப்பதற்காக கரைகள் பலப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. கரைகளில் மண் கொட்டப்பட்டு அகலப்படுத்தப்படுகிறது. மேலும், சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்கு வசதியாக நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளின் சீசன் நிறைவடைந்துவிட்டது. இதனால் இந்திய நாட்டு பறவைகள்தான் அதிகமாக வசித்து வருகின்றன. சரணாலயத்தை சுற்றிலும் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு வசதியாக கரையில் நடைபாதை அமைக்கப்படுகிறது. இதில் தண்ணீர் உள்ளே வரும் 8 இடங்களில் பெரிய குழாய்கள் பதிக்கப்பட்ட பாலங்களும், தண்ணீர் வெளியேறும் பகுதியில் சிறிய மேம்பாலமும் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 4½ கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபாதை அமைக்கப்படுகிறது.

இந்த பணிகள் 4 மாதங்களில் நிறைவடையும். இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஏரியில் நடந்து சென்று பறவைகளை பார்வையிடலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story