கடலூரில் குடிநீர் குழாயில் உடைப்பு - கோடையில் வீணாகும் தண்ணீரால் மக்கள் வேதனை


கடலூரில் குடிநீர் குழாயில் உடைப்பு - கோடையில் வீணாகும் தண்ணீரால் மக்கள் வேதனை
x
தினத்தந்தி 30 April 2019 11:15 PM GMT (Updated: 30 April 2019 10:23 PM GMT)

கடலூர் செம்மண்டலத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் சாலையில் ஆறாக ஓடியது. கோடையில் தண்ணீர் வீணாவதால் மக்கள் வேதனையடைந்து இருக்கிறார்கள்.

கடலூர்,

கடலூர் நகராட்சி பகுதிகளுக்கு கேப்பர்மலை மற்றும் திருவந்திபுரம் பகுதியில் உள்ள நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கென பிரதான குழாய்கள் மூலம் குடிநீரை எடுத்துவந்து கடலூர் நகர பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நிரப்பி பின்னர் நகரமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகித்து வருகிறது.

சமீபகாலமாக நகர பகுதியில் குடிநீர் குழாய்களில் உடைப்புகள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் செம்மண்டலத்தில் பிரதான குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதையடுத்து அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் சாலையில் ஆறாக ஓடியது. மேலும் அந்த பகுதியில் குளம் போன்று தண்ணீர் தேங்கி நின்று வருகிறது.

உடைப்பு காரணமாக அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். சிலர் தனியார் குடிநீர் வாகனங்களில் பணம்கொடுத்து குடிநீரை வாங்கி தேவையை பூர்த்திசெய்தனர்.

தற்போது கோடை காலம் என்பதால் மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் நகர பகுதியிலேயே அவ்வப்போது இதுபோன்று குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் சாலையில் வீணாகி வருவது மக்களை வேதனை அடைய செய்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் குறுகிய காலத்திலேயே கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்போடுவோம் என்ற அச்சம் எழுவதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். உடைப்பு குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும், விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும்.

இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கடலூர் திருவந்திபுரம் நீரேற்று நிலையத்தில் இருந்து செம்மண்டலம் தீபன் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் எடுத்து வரும் பிரதான குழாயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. தற்போது உடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கும் பணியையும் தொடங்கி விட்டதாக அவர் தெரிவித்தார்.


Next Story