பள்ளி கல்வித் துறைக்கு மந்திரி நியமிக்காமல் இருப்பது வெட்கக்கேடு : எச்.விஸ்வநாத் பேச்சு


பள்ளி கல்வித் துறைக்கு மந்திரி நியமிக்காமல் இருப்பது வெட்கக்கேடு : எச்.விஸ்வநாத் பேச்சு
x
தினத்தந்தி 30 April 2019 10:27 PM GMT (Updated: 30 April 2019 10:27 PM GMT)

கர்நாடகத்தில் பள்ளி கல்வித் துறைக்கு மந்திரி நியமிக்காமல் இருப்பது வெட்கக் கேடு என்று ஜனதாதளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் எச்.விஸ்வநாத் கூறினார்.

பெங்களூரு, 

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பில் கல்வியின் பங்கு குறித்த கருத்தரங்கு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் ஜனதா தளம் (எஸ்) மாநில தலைவர் எச்.விஸ்வநாத் கலந்து கொண்டு, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் ஏழைகள், ஆதிதிராவிடர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர். ஆனால் மேல்-சபை உறுப்பினர்கள், குறிப்பாக ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் அதுபற்றி பேசுவதே இல்லை.

தொழிலாளர் நலத்துறையில் அதிகளவில் நிதி உள்ளது. ஆனால் இந்த நிதியை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு, குழந்தைகளின் நலனுக்கு திட்டங்களை தீட்டுவது இல்லை.

தொழிலாளர், கல்வித்துறை மந்திரிகள், அதிகாரிகள் மற்றும் சமூக சேவை மனப்பான்மை கொண்ட அமைப்புகளுடன் ஆலோசித்து, குழந்தைகளின் கல்விக்கு தேவையான திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.

இதன் மூலம் கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க மத்திய-மாநில அரசுகள் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 6 மாதமாக கர்நாடகத்தில் பள்ளி கல்வித்துறைக்கு மந்திரி இல்லாமல் இருப்பது வெட்கக்கேடானது.

இவ்வாறு எச்.விஸ்வநாத் பேசினார்.


Next Story