இளையான்குடியில் மயான பாதை ஆக்கிரமிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை
இனையான்குடியில் மயானத்திற்கு செல்லும் பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளையான்குடி,
இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள மல்லிபட்டிணம், பகைவரை வென்றான் ஆகிய கிராமங்களுக்கான பொது மயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மயானத்திற்கு செல்வதற்கான பொதுப்பாதை இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
காரணம் மயானத்திற்கான பொதுப்பாதையை அந்த பகுதியில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனராம். மேலும் இங்குள்ள ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் மயானத்திற்கு செல்ல வேண்டுமானால், வேறு பாதையில் சுற்றி வரவேண்டும்.
அந்த பாதையும் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கியிருப்பதால், சேறும் சகதியுமாக உள்ளதால் மயானத்திற்கு செல்ல சிரமம் ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் தங்கள் சொந்த செலவில் சாலை அமைத்தால் மட்டுமே, மயானத்திற்கு சென்று வர முடியும் என்றும் அவர்கள் கூறினர்.
எனவே மயானத்திற்கு புதிய சாலை வசதி ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே ஆக்கிரமிப்பு மற்றும் அந்த பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற முடியும். இரு கிராம மக்களின் நலன்கருதி மயானத்திற்கு புதிய சாலை வசதி செய்து தரவேண்டும். மேலும் இளையான்குடி பேரூராட்சி உட்பட்டதாக இந்த பகுதி அமைந்துள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.