சமையல் எண்ணெய் மீதான புகாரை தொடர்ந்து சிங்கம்புணரி பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
சிங்கம்புணரி பகுதியில் தரமற்ற சமையல் எண்ணெய் விற்பனை செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் பகுதியில் அதிக அளவில் எண்ணெய் ஆலைகள் உள்ளன. நாடு முழுவதற்கும் இங்கிருந்து எண்ணெய் அனுப்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிங்கம்புணரியில் தரமற்ற சமையல் எண்ணெய் விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன. அதன் பேரில் எண்ணெய் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் உணவு பாதுகாப்பு ஆணையம் சார்பில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் சிங்கம்புணரி பகுதிக்கு நேரில் சென்று எண்ணெய் ஆலைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தார். அதில் எண்ணெய் ஆலைகள் அதிபர்களிடம் தரமற்ற எண்ணெய் தயாரிப்பது தடைசெய்யப்பட்ட குற்றம் மேலும் அதை சில்லறை வர்த்தகம் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அரசின் ஆணையை தொடர்ந்து மீறி சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டால் அரசு விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்தார். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கூறுகையில், கலெக்டரின் அறிவுறுத்தலின்படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
எண்ணெய் ஆலைகளிலும், சில்லறைக்காக வைக்கப்பட்டிருந்த எண்ணெய் கேன்களும் பரிசோதனை செய்யப்பட்டன. சில்லறை வணிகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே எண்ணெய் விற்பனையாளர்கள் கூட்டத்தில் பாட்டில்களில் அடைத்து எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்றார். இந்த திடீர் ஆய்வு சிங்கம்புணரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.