மாநில முன்னேற்றத்துக்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளது; மே தின வாழ்த்து செய்தியில் நாராயணசாமி தகவல்


மாநில முன்னேற்றத்துக்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளது; மே தின வாழ்த்து செய்தியில் நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 30 April 2019 11:27 PM GMT (Updated: 30 April 2019 11:27 PM GMT)

புதுவை மாநிலம் வேகமாக முன்னேறுவதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளது என்று மே தின வாழ்த்து செய்தியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி,

மே தினத்தை முன்னிட்டு முதல்–அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

உழைக்கும் மக்களின் திருநாளாக கருதப்படும் இந்த மே தினத்தில் புதுவை மாநில மக்கள் அனைவருக்கும், குறிப்பாக உழைக்கும் பாட்டாளி வர்க்க தோழர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வேளாண் தொழிலாளர்கள் தொடங்கி அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், பஞ்சாலை தொழிலாளர்கள் என அனைத்து தொழில் பிரிவுகளை சேர்ந்த பட்டாளி தோழர்களின் நலனில் எங்கள் அரசு எப்போதும் தனிக்கவனம் கொண்டுள்ளது. அவர்களது வளமான வாழ்வுக்கு உத்தரவாதம் தரும் அரசாக எங்கள் அரசு தொடரும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டு உள்ளேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மீறி கவர்னர் செயல்படக்கூடாது என்று தொடர்ந்து வழக்கில் புதுச்சேரி மக்களுக்கு சாதகமாக மக்களாட்சியின் மேன்மையை உணர்த்தும் வண்ணம் தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பினால் புதுச்சேரி மக்கள் அனைவரும் பலன் அடைவதோடு புதுச்சேரி மாநிலம் வேகமாக முன்னேறுவதற்கு தடைகள் நீக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் தினமாக மே தின நன்னாளில் உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் உழைத்ததில் தொழிலாளர்களின் பங்கு மகத்தானது. அத்தகைய உழைப்பை வழங்கி தங்களை அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர் பெருமக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி எனது அருமை தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் கந்தசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உழைக்கும் வர்க்கத்தின் உரிமையை உலகமே கொண்டாடும் மே மாதம் 1–ந்தேதியை தொழிலாளர் தினமாக கடைபிடிக்கின்றோம். நம் நாட்டின் அனைத்து தொழிலாளர்களுக்கும், புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மே தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். புதுச்சேரி அரசு தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள நலன்களை கருத்தில் கொண்டு, நாடும், வீடும், வளமும் நலமும் பெற நம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்ய சூளுரைப்போம், என்று கூறியுள்ளார்.

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசின் தவறான தொழில் கொள்கையினால் பல தரப்பட்ட தொழிலாளர்களும், அரசு சார்பு நிறுவன ஊழியர்களும் பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதையெல்லாம் சரிசெய்ய வேண்டிய ஆளும் காங்கிரஸ் அரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பது வேதனைக்குரிய செயலாகும். தொழிலாளர்கள் நலன் அடைய வருங்காலத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைய நாம் சபதம் ஏற்போம் என்று கூறியுள்ளார்.

தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. விடுத்துள்ள செய்தியில், மத்தியில் ஆளும் பாசிச பாரதீய ஜனதா அரசு பெருநிறுவன முதலாளிகளுக்கு அடிமைப்பட்டு ஆட்சி செய்கின்ற காரணத்தினால் தொழிலாளர்களின் உரிமைகள் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளன. இந்தநிலை மேலும் தொடர்ந்தால் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். தொழிற்சங்கங்களை அழிக்க நினைக்கும் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு முடிவுகட்டும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என்ற நம்பிக்கையை மே தினம் ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் வேல்முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உழைப்பிற்கு என்றும் உயர்வுண்டு. உழைக்கும் கைகளால்தான் வாழ்வில் வளமும், நலமும் பெருகும் என்ற உண்மையை உள்ளத்தில் நிறுத்தி அனைவரும் நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் நிச்சயம் வெற்றிபெறலாம். நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்திடும் தொழிலாளர்கள் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று இன்புற்று வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.


Next Story