தேர்தல் கமிஷனுக்கு, முதல்-மந்திரி பட்னாவிஸ் கோரிக்கை


தேர்தல் கமிஷனுக்கு, முதல்-மந்திரி பட்னாவிஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 30 April 2019 11:42 PM GMT (Updated: 30 April 2019 11:42 PM GMT)

வறட்சி நிவாரண பணிகளை முடுக்கி விடுவதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை, 

மராட்டியத்தில் 4 கட்டமாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. ஆனால் ஓட்டு எண்ணிக்கை வருகிற 23-ந் தேதி தான் நடக்கிறது. அதுவரை தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும்.

இந்தநிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த கோரி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “மராட்டியத்தில் ஏறத்தாழ 151 தாலுகாக்கள் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளுக்கு ரூ.4 ஆயிரத்து 714 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சி குறித்து ஆலோசனை நடத்த மந்திரிகள் சபை கூட்டத்தை கூட்டவேண்டிய கட்டாயம் உள்ளது. அதுமட்டுமின்றி வறட்சி நிவாரண பணிகளை முடுக்கி விடவேண்டி உள்ளது. மராட்டியத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து விட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த வேண்டும்” என கூறப்பட்டு உள்ளது.

மேலும் 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போதும், வாக்குப்பதிவு முடிந்த பிறகு நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மராட்டியத்தில் கடந்த மார்ச் 10-ந் தேதி முதல் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story