பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் தண்டோரா அடித்து போராட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் தண்டோரா அடித்து போராட்டம்
x
தினத்தந்தி 30 April 2019 11:43 PM GMT (Updated: 30 April 2019 11:43 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் தண்டோரா அடித்து போராட்டம் நடத்தினர்.

திருப்பூர்,

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தண்டோரா அடித்து தொடர் முழக்க போராட்டம் நேற்று மதியம் திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். மாத ஊதியத்தை நிரந்தர ஊதிய நடைமுறையில் வழங்க வேண்டும். சாலைபராமரிப்பு பணியை தனியார் பராமரிக்க வழங்கும் கொள்கை முடிவை கைவிட வேண்டும். நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு கோட்ட தலைவர்கள் சிவக்குமாரன்(திருப்பூர்), சிவக்குமார்(ஈரோடு), வெங்கிடுசாமி(தாராபுரம்), செவந்திலிங்கம்(கரூர்) ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன் தொடக்க உரையாற்றினார். திருப்பூர் கோட்ட செயலாளர் ராமன் வரவேற்று பேசினார்.

கோரிக்கைகளை விளக்கி கோட்ட செயலாளர்கள் தில்லையப்பன்(தாராபுரம்), பழனிச்சாமி(கரூர்), ரங்கசாமி(ஈரோடு) ஆகியோர் பேசினார்கள். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன், தொழிற்பயிற்சி அலுவலர் சங்க மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் நிறைவுரை ஆற்றினார். போராட்டத்தின் போது தண்டோரா அடித்தனர். முடிவில் தாராபுரம் கோட்ட பொருளாளர் முருகசாமி நன்றி கூறினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story