காருக்குள் பெண் பிணம்; குழந்தையுடன் கணவர் தலைமறைவு - போலீசார் தீவிர விசாரணை


காருக்குள் பெண் பிணம்; குழந்தையுடன் கணவர் தலைமறைவு - போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 1 May 2019 12:07 AM GMT (Updated: 1 May 2019 12:07 AM GMT)

பெருமாநல்லூர் அருகே காருக்குள் பெண் பிணம் இருந்தது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் குழந்தையுடன் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.


பெருமாநல்லூர்,

காருக்குள் பெண் பிணம் இருந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் கவுரவ் அரோரா (வயது 35). இவருக்கும் அதே மாநிலத்தை சேர்ந்த பிரஸ்ஜோத் கவுருக்கும் (29) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் தேஜஸ் ஷாவ் என்ற மகன் உள்ளான். கவுரவ் அரோரா திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் அய்யப்பாநகரில் சொந்தமாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். தொழிலதிபரான இவர் வீட்டின் மாடியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து கவுரவ் அரோராவின் நண்பரான ராயபுரத்தை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் அடிக்கடி கணவன்-மனைவியை சமாதானம் செய்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கவுரவ் அரோரா தனது நண்பர் ரவீந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டு, தனது மனைவி இறந்து விட்டதாகவும், அவருடைய உடல் காரில் கவர் போட்டு மூடி வைத்துள்ளதாகவும், அந்த கார் பெருமாநல்லூர் அருகே நிறுத்தி வைத்து இருப்பதாகவும் கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரவீந்திரன், இது குறித்து பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, கார் நிறுத்தப்பட்டு இருந்த இடத்திற்கு சென்றார். இதற்கிடையில் போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரின் கண்ணாடிகள் லாக் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து காரின் கண்ணாடியை உடைத்து போலீசார் பார்த்தபோது காரின் பின் இருக்கையில் காருக்கு போடப்படும் கவரால் பிரஸ்ஜோத் கவுர் உடல் மூடப்பட்டு இருந்தது.

இதையடுத்து அந்த உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கவுரவ் அரோராவை போலீசார் தொடர்பு கொள்ள முயன்றபோது அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து மேலும் தகவல் ஏதும் கிடைக்குமா? என்று ரவீந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கவுரவ் அரோரா கூறியதாக ரவீந்திரன் போலீசில் கூறியிருப்பதாவது:-

கவுரவ் அரோராவின் வீடு தனித்தனி அறைகளை கொண்டது. இந்த வீட்டில் 28-ந் தேதி இரவு கவுரவ் அரோரா ஒரு அறையிலும், மற்றொரு அறையில் பிரஸ்ஜோத் கவுரும், அவருடைய குழந்தையும் படுத்து தூங்கி உள்ளனர். பின்னர் மறுநாள் காலையில் கவுரவ் அரோரா எழுந்து தனது மனைவியும் படுக்கையில் இருந்து எழுந்து விட்டாரா? என்று பார்க்க சென்றுள்ளார். அப்போது பிரஸ்ஜோத் கவுர் படுத்து தூங்கிய அறையின் கதவு பூட்டாமல் சாத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார்.

அப்போது அந்த அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் பிரஸ்ஜோத் கவுர் தூக்கில் தொங்கியதாகவும், அதை பார்த்து அதிர்ச்சியடைந்தாவும், உடனே அவரை மீட்டு காரில் போயம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது குழந்தையையும் அழைத்து உடன் சென்றார்.

அங்கு பிரஸ்ஜோத் கவுருக்கு நாடித்துடிப்பு குறைவாக இருந்ததாகவும், எனவே திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். ஆனால் பாதி தூரம் சென்றதும், பிரஸ்ஜோத் கவுர் இறந்து விட்டதாக தெரியவந்தது.

இதனால் மனைவியின் உடலை காரின் பின் இருக்கையில் வைத்த கவுரவ் அரோரா, காரை பெருமாநல்லூர் பகுதிக்கு ஓட்டிச்சென்றுள்ளார். அங்கு காரை சாலையின் ஓரமாக நிறுத்திய பின்னர் காருக்கு போர்த்தும் கவரை கொண்டு மனைவி உடலை போர்த்தியதோடு காரை லாக் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து குழந்தையுடன் செல்வதாக தன்னிடம் கூறி விட்டு சென்றதாக போலீசில் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரஸ்ஜோத் கவுரின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் எப்படி இறந்தார் என தெரியவரும். மேலும் குழந்தையுடன் தலைமறைவாக உள்ள கவுரவ் அரோராவை போலீசார் தீவிரதேடி வருகிறார்கள். பெருமாநல்லூர் அருகே காருக்குள் பெண் பிணமாக இருந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story