நாடாளுமன்ற தேர்தலில் 48 தொகுதிகளில் 60.79 சதவீத வாக்குப்பதிவு


நாடாளுமன்ற தேர்தலில் 48 தொகுதிகளில் 60.79 சதவீத வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 1 May 2019 12:07 AM GMT (Updated: 1 May 2019 12:07 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியம் முழுவதும் உள்ள 48 தொகுதிகளில் சராசரியாக 60.79 சதவீத வாக்குகள் பதிவாகின.

மும்பை,

மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் 11, 18, 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 4 கட்டமாக நடைபெற்றது.

இந்த முதல் கட்ட தேர்தல் நடந்த 7 தொகுதிகளில் 55.78 சதவீதமும், இரண்டாம் கட்டமாக 10 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 62.91 சதவீதமும், 3-ம் கட்டமாக 14 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 62.37 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகின.

நேற்று முன்தினம் 17 தொகுதிகளில் நடைபெற்ற கடைசி கட்ட தேர்தலில் 57.32 சதவீத வாக்குகள் பதிவாகின. இதன்படி மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளில் சராசரியாக 60.79 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் கமிஷன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கடந்த 2014-ம் ஆண்டு மராட்டியத்தில் 60.32 சதவீத வாக்குகள் பதிவாகின. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஓட்டு சதவீதம் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட கூடுதலாக 50 லட்சம் வாக்காளர்கள் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

மேலும் இறுதி கட்ட தேர்தல் நடைபெற்ற 17 தொகுதிகளில் அதிகபட்சமாக நந்துர்பரில் 68.32 சதவீதம் வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்சமாக கல்யாணில் 45.28 சதவீத வாக்குகள் பதிவாகின.

மற்றபடி, துலே- 56.68 சதவீதம், தின்டோரி- 65.76 சதவீதம், நாசிக்- 59.43 சதவீதம், பால்கர்- 63.72 சதவீதம், பிவண்டி- 53.07 சதவீதம், தானே- 49.21 சதவீதம், வடமும்பை- 60 சதவீதம், வடமேற்கு மும்பை- 54.23 சதவீதம், வடகிழக்கு மும்பை- 56.85 சதவீதம், வடமத்திய மும்பை- 53.64 சதவீதம், தென்மத்திய மும்பை- 55.23 சதவீதம், தென்மும்பை- 51.46 சதவீதம், மாவல்- 59.49 சதவீதம், சிரூர்- 59.40 சதவீதம், ஷீரடி- 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மராட்டியத்தில் தேர்தல் முடிந்து விட்டாலும், நாடு முழுவதும் இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க வேண்டி உள்ளது. எனவே தேர்தல் முழுமையாக நடந்த பிறகு வருகிற 23-ந் தேதி தான் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தல் முடிவை தெரிந்து கொள்ள அதுவரை காத்திருக்க வேண்டும்.

Next Story