ஆலாந்துறை அருகே, காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி


ஆலாந்துறை அருகே, காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 2 May 2019 4:15 AM IST (Updated: 1 May 2019 11:16 PM IST)
t-max-icont-min-icon

ஆலாந்துறை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பேரூர்,

கோவையை அடுத்த ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்வயல் சப்பாணி மடை தோட்டத்தை சேர்ந்தவர் சுப்பையன். இவருடைய மனைவி சின்னமணி (வயது 60). இவர்கள் அங்குள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். சுப்பையன் விபத்தில் சிக்கி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் வீட்டில் சின்னமணி மட்டும் தனியாக இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மின்சாரம் இல்லாததால் சின்னமணி தோட்டத்து வீட்டின் முன்புறம் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை காட்டு யானை அவரை தாக்க முயன்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காட்டு யானையிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த யானை அவரை விடாமல் துரத்தி சென்று துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த சின்னமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் காருண்யா நகரைச் சேர்ந்த பாலன் என்பவர் சுப்பையனின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக, அவர் மருத்துவமனையில் இருப்பது தெரியாமல் அவருடைய வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது சின்னமணி காட்டு யானை தாக்கி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போளூவாம்பட்டி வனத்துறையினர் மற்றும் காருண்யா நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காருண்யா நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காட்டு யானை தாக்கி மூதாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story