ஊட்டி சாலைகளில், கால்நடைகளை திரியவிட்டால் அபராதம் - நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை


ஊட்டி சாலைகளில், கால்நடைகளை திரியவிட்டால் அபராதம் - நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 May 2019 3:45 AM IST (Updated: 1 May 2019 11:16 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி கமிஷனர் நாராயணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஊட்டி,

சுற்றுலா நகரமான ஊட்டியில் ஆடு, மாடு, குதிரைகள் போன்ற கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிந்து வருகின்றன. முக்கிய சாலைகளான கமர்சியல் சாலை, லோயர் பஜார், எட்டின்ஸ் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, தாவரவியல் பூங்கா சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி மற்றும் ஊட்டி படகு இல்ல சாலையில் கால்நடைகள் பகல் நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக உலா வந்து கொண்டு இருக்கிறது. அவை சாலையின் நடுவே படுத்துக்கொள்வதாலும், அப்படியே நிற்பதாலும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தநிலையில் ஊட்டி சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி கமிஷனர் நாராயணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஊட்டியில் தற்போது கோடை விழாக்கள் நடைபெற்று வருகின்றன. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, குதிரைகள் போன்ற கால்நடைகள் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும் சுற்றித்திரிந்து வருகின்றன. இதுகுறித்த புகார்கள் வந்த வண்ணமாக உள்ளன. பலமுறை சம்பந்தப்பட்ட கால்நடைகள் வளர்ப்போரிடம் கூறியும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆடு, மாடு, குதிரைகளை சாலைகளில் சுற்றித்திரிய விடக்கூடாது. அவரவர்களது சொந்த இடத்தில் கால்நடைகளை கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இதனை மீறி சாலைகளில் சுற்றித்திரிய விட்டால், தமிழ்நாடு பொதுசுகாதார சட்டத்தின் படி கால்நடை உரிமையாளர்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரிய விட்டால் முதல் முறை ரூ.ஆயிரம், 2-வது முறை ரூ.5 ஆயிரம், 3-வது முறை ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, நகராட்சி மூலம் கால்நடைகள் அப்புறப்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story