திருச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி விற்பனை 3 வாலிபர்கள் கைது; கார் பறிமுதல்


திருச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி விற்பனை 3 வாலிபர்கள் கைது; கார் பறிமுதல்
x
தினத்தந்தி 1 May 2019 11:15 PM GMT (Updated: 1 May 2019 7:29 PM GMT)

திருச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி விற்பனை செய்ததாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி,

தமிழகத்தில் அரசால் நடத்தப்படும் ‘டாஸ்மாக்’ கடைகளில் மது விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. குறிப்பாக பண்டிகைகள், துக்கநிகழ்ச்சி, கோவில் விழாக்கள், திருமணவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் மதுகுடிப்பது இன்றைய காலகட்டத்தில் ஜாலியான சம்பவமாகிவிட்டது.

குறிப்பாக தமிழகத்தில் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை மதுப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டது தான் வேதனை. இந்த பழக்கம் பள்ளி, கல்லூரி மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை. மது பாட்டில் விலை அதிகம் என்பதால், இளைஞர்கள் சிலர், பஞ்சர் ஒட்ட பயன்படும் பசையில் தீவைத்து அதில் இருந்து வெளியேறும் புகையை நுகர்ந்து போதையை ஏற்று கிறார்கள்.

இந்தநிலையில் தற்போது போதை மாத்திரைகளை மருந்து கடைகளில் வாங்கி, அதை தூளாக்கி தண்ணீரில் கலந்து, அதை ஊசி மூலம் உடலில் செலுத்தி போதைக்கு அடிமையாவதும் அதிகரிக்க தொடங்கி விட்டது. திருச்சி சத்திரம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவருக்கு, அவரது நண்பர்கள் சிலர் உடலில் போதை ஊசியை கட்டாயமாக செலுத்தியதால் கைவீக்கம் எடுத்து அழுகி, கையை அகற்றும் அளவுக்கு மாறியது.

இதுபோல கல்லூரி மாணவர் ஒருவரின் நடவடிக்கையில் மாற்றத்தை அறிந்து பெற்றோர் விசாரிக்கையில், சேரக்கூடாத நண்பர்களுடன் சேர்ந்ததால் உடலில் போதை ஊசி செலுத்தப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டதை அறிந்தனர். இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த பின்னர், மாநகர போலீசார் மருந்து கடை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு, டாக்டர்களின் அனுமதி சீட்டு இன்றி போதை மாத்திரைகள் விற்பனை செய்த மருந்து கடை ஊழியர்கள் சிலரை கைது செய்தனர்.

நாளடைவில் போலீசாரின் நடவடிக்கை தளர்ந்ததால், தற்போது மீண்டும் போதை ஊசி போட்டுக்கொள்ளும் சம்பவம் திருச்சி நகரில் தலைதூக்க தொடங்கி விட்டது. திருச்சியில் தனியார் கல்லூரி ஒன்றின் அருகில் உடலில் போதை ஊசி செலுத்தி கொண்டிருந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் விவரம் வருமாறு:-

திருச்சி-திண்டுக்கல் சாலையில் கருமண்டபத்தில் உள்ள தனியார் கல்லூரி முன்பு, ஒரு கும்பல் காருடன் வந்து போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை மாணவர்களுக்கு உடலில் செலுத்தி வருவதாக திருச்சி கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார், குறிப்பிட்ட கல்லூரி அருகில் நீண்ட நேரம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த கல்லூரியின் விடுதி அருகில் காரை நிறுத்திக்கொண்டு 3 பேர் கும்பல் கல்லூரி மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், போதை ஊசியை உடலில் செலுத்திக்கொண்டு அதிக போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், புதுச் சேரியில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி, அவற்றை பவுடர் ஆக்கி தண்ணீரில் கரைத்து ஊசி(சிரஞ்ச்) மூலம் ஏற்றி மாணவர்களிடம் குறிப்பிட்ட தொகை வாங்கி கொண்டு விற்பனை செய்தது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் திருச்சி பீமநகர் நியூராஜா காலனியை சேர்ந்த காஜாமைதீன்(வயது 22), திருச்சி கீழ ஆண்டாள் தெருவை சேர்ந்த வினோத்(25), திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் சேதுராம்பிள்ளை காலனியை சேர்ந்த யூரேன்சந்த்(21) ஆவர்.

மேலும் அவர்களுக்கு சொந்தமான கார் மற்றும் 5 போதை மாத்திரைகள், ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி மாநகரில் இத்தகைய போதை ஊசி விற்பனை கும்பல் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியினை போலீசார் மீண்டும் தொடங்கி உள்ளனர்.

Next Story