அய்யலூர் அருகே, தனியார் பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்


அய்யலூர் அருகே, தனியார் பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 May 2019 11:00 PM GMT (Updated: 1 May 2019 7:40 PM GMT)

அய்யலூர் அருகே பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் முறையாக நிற்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தனியார் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமதுரை,

திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூரை அடுத்து 4 கி.மீ. தொலைவில் தங்கம்மாபட்டி உள்ளது. இதனை சுற்றி முடக்குப்பட்டி, புதூர், கருஞ்சின்னானூர், சம்பக்காட்டுபள்ளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் தங்கம்மாபட்டியில் நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் அங்கு பஸ்கள் முறையாக நின்று செல்வதில்லை.

இதனால் தங்கம்மாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்வோரும் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் இருந்து தங்கம்மாபட்டிக்கு பயணிகள் சிலர் ஒரு தனியார் பஸ்சில் சென்றுள்ளனர். பஸ் கண்டக்டர் தங்கம்மாபட்டி நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தாமல், சிறிது தூரம் தள்ளி சென்று அவர்களை இறக்கிவிட்டு சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பஸ்சை தங்கம்மாபட்டி பஸ் நிறுத்தம் அருகே சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவலறிந்ததும் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் பஸ்கள் முறையாக நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story