இரு கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க.வை இணைக்கும் நிலை உருவாகி வருகிறது - டி.டி.வி.தினகரன் கடும் தாக்கு


இரு கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க.வை இணைக்கும் நிலை உருவாகி வருகிறது - டி.டி.வி.தினகரன் கடும் தாக்கு
x
தினத்தந்தி 1 May 2019 11:30 PM GMT (Updated: 1 May 2019 8:09 PM GMT)

பா.ஜனதாவோடு அ.தி.மு.க.வை இணைக்கும் நிலை உருவாகி வருகிறது என தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி. தினகரன் பேசினார்.

மதுரை,

தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உள்பட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் மதுரை மாவட்ட செயலாளர் மகேந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று தனது பிரசாரத்தை தொடங்கினார். மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் பிரசார வாகனத்தில் நின்றபடி டி.டி.வி. தினகரன் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிற மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தேர்தல் இது. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளருக்கு வாக்களித்தது போல இடைத்தேர்தலிலும் வாக்களிக்க வேண்டும். 18 தொகுதிகளில் அ.ம.மு.க. வெற்றி பெற்று விடும் என்ற தோல்வி பயத்தால் எங்களுக்கு ஆதரவு அளித்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பரிசு பெட்டி சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலமாக தமிழகத்திற்கு விடிவுகாலம் வரும். அதன்மூலம் துரோகிகளுக்கு பாடம் புகட்டலாம்.

வருகிற 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பின் அ.தி.மு.க. ஆட்சி தொடராது. அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்த இடங்கள் தற்போது அ.ம.மு.க.வின் கோட்டையாக மாறி வருகிறது. இந்த ஆட்சியில் ஏழை-எளிய மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கடந்த 2½ வருடமாக பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் தான் நலமாக வாழ்ந்து வருகின்றனர். மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மக்களுக்கு விடிவு வர வேண்டும் என்றால், இந்த ஆட்சிக்கு முடிவு வரவேண்டும்.

இரட்டைஇலை சின்னம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கையில் இருக்கும்போது தான் வெற்றி சின்னம். ஆனால், தற்போது அந்த சின்னம் துரோகிகள் கையில் உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தும் கூட அவர்களால் அந்த தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை. சுயேச்சையாக போட்டியிட்ட என்னை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். இதன்மூலம் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

பா.ஜ.க.விடம் தமிழ்நாட்டையும், கட்சியையும் அடகு வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது. இந்த ஆட்சி வருவதற்கு காரணமாக இருந்த சசிகலாவிற்கு கூட அவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள். இப்படி பல துரோகங்களை செய்து விட்டு வாரணாசியில் பாத பூஜை செய்து வருகிறார்கள். அ.தி.மு.க.விற்கு வாக்களித்தால், பா.ஜ.க.விற்கு வாக்களித்ததாக அர்த்தம். பா.ஜ.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய் விட்டது. அ.தி.மு.க.வை பா.ஜனதாவோடு இணைக்கும் நிலை உருவாகி வருகிறது. இதுதான் உண்மை. அம்மாவின் 95 சதவீத தொண்டர்கள் அ.ம.மு.க.வில் இருக்கின்றனர். அவர்கள் என்ன நினைத்தாலும் மக்கள் சக்தி நிச்சயம் வெற்றி பெறும். பணம் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிடலாம் என நினைக்கிறார்கள். எனவே அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக டி.டி.வி. தினகரன் மதுரையில் உள்ள ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, அரசு ஒப்பந்த ஒதுக்கீட்டில் தி.மு.க.வும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக உள்ளனர். தேர்தல் முடிவு பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடிய நிலையை உருவாக்கும். ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்று வந்தது, மோடியின் ஏஜெண்டாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. கொடியின் நடுவே காவி வண்ணமும், தாமரையும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்.

Next Story