கொட்டாம்பட்டி அருகே விவசாயி வீட்டில் 21 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை
கொட்டாம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், 21 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள குன்னாரம்பட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 60). விவசாயியான இவருக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இதனால் துரைப்பாண்டியும், அவரது மனைவியும் தனியாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு துரைப்பாண்டியும், அவரது மனைவியும் சேக்கிபட்டியில் உள்ள தங்களது தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
இதனால் வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டினுள் பீரோவை திறந்து, அதில் வைக்கப்பட்டிருந்த 21 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.
பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்த துரைப்பாண்டி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று அவர் பார்த்தபோது, நகைகள் மற்றும் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் உடனடியாக கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
கொட்டாம்பட்டி பகுதியில் சமீப காலமாகவே நகை பறிப்பு, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே இந்த சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.