மக்களை ஏமாற்றி தி.மு.க.வால் ஆட்சியை பிடிக்க முடியாது சூலூர் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு


மக்களை ஏமாற்றி தி.மு.க.வால் ஆட்சியை பிடிக்க முடியாது சூலூர் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
x
தினத்தந்தி 1 May 2019 11:00 PM GMT (Updated: 1 May 2019 8:23 PM GMT)

மக்களை ஏமாற்றி தி.மு.க.வால் ஆட்சியை பிடிக்க முடியாது என்று சூலூர் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை,

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜல்லிப்பட்டியில் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி. அவரது வழியில் கட்சியை ஜெயலலிதா திறம்பட நடத்தி வந்தார். ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் ஏற்றத்துக்காக தொடங்கப்பட்டதுதான் அ.தி.மு.க. கட்சி. ஆனால் தி.மு.க. குடும்பத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி. மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை அறிவித்து, அவர்கள் முன்னேறுவதற்காக வழிவகை செய்யும் கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. அ.தி.மு.க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர். தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தார். அதுபோன்றே ஜெயலலிதாவும் இந்த இயக்கத்தில் எத்தனையோ போராட்டம் வந்தபோதும், அதனை சமாளித்து எம்.ஜி.ஆர். விட்டுச்சென்ற பணியை செய்தார். எனவே அந்த இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் வி.பி.கந்தசாமியை நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

தமிழக மக்களுக்காக நாங்கள் எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தி வருகிறோம். தி.மு.க. ஆட்சியின் போதும், அ.தி.மு.க. ஆட்சியின் போதும் மக்களுக்காக செய்த நலத்திட்டங்களை ஒப்பிட்டு பாருங்கள். அதில் அ.தி.மு.க. அரசு தான் அதிக நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என்பது உங்களுக்கு தெரியும்.

கிராமம், நகரம் என்று பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களுக்கும் பல நலத்திட்டங்களை செய்துள்ளோம். இந்த பகுதி நெசவாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். இந்த மூன்று தொழிலையும் நம்பி வாழ்பவர்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. நெசவாளர்களுக்கு இலவச மின்சார திட்டம், பசுமை வீடு திட்டம் மற்றும் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார். இந்தியாவிலேயே இலவச மின்சார திட்டம் தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. ஏழைகளின் நலனுக்காக 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக அதிகரிக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

இதுதவிர மக்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அ.தி.மு.க. அரசு செய்து கொடுத்துள்ளது. இந்த பகுதியில் வறட்சி அதிகமாக உள்ளதாக கூறினார்கள். ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற உள்ளோம். அப்போது இந்த பகுதியில் வறட்சி நீங்கும். இந்த திட்டத்துக்காக உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயத்தை மேம்படுத்தவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் குடிமராமத்து பணியை தொடங்கியது நாங்கள் தான். இதன் மூலம் ஏரிகள், குளங்கள், குட்டைகள் தூர்வாரப்பட்டு வருகிறது. இதுவரை 3 ஆயிரம் ஏரிகளை தூர்வாரி உள்ளோம். தடுப்பணைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் வீணாகாமல், நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதற்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டவர் ஜெயலலிதா. தான் பெறாத பிள்ளைகளையும், பெற்ற பிள்ளைகளாக நினைத்து அவர்கள் படிப்பதற்கு தேவையான இலவச பை, காலணி, சீருடை, நோட்டு புத்தகம், சைக்கிள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் செய்து கொடுத்தார். மேலும் அறிவுப்பூர்வமான திறனை மேம்படுத்துவதற்கு இலவச மடிக்கணினி திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தினார். இதனால் கடந்த ஆண்டுகளில் 95 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எங்கு கல்வி அறிவு நன்றாக இருக்குமோ அங்கு தான் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அதற்காக தான் ஜெயலலிதா இந்த திட்டங்களை கொண்டு வந்தார். இதனால் தமிழகம் உயர்கல்வி துறையில் 46.8 சதவீதம் பெற்று இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளது. தை பொங்கலை அனைத்து தரப்பினரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தான் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தோம். ஆனால் இந்த திட்டத்தை முடக்குவதற்கு மு.க.ஸ்டாலின் கோர்ட்டு வரை சென்றார். ஆனால் கோர்ட்டு தடைவிதிக்க மறுத்துவிட்டதால் அந்த திட்டத்தை முடக்க முடியவில்லை.

அதுபோல விசைத்தறி தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தோம். ஆனால் தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவித்து இந்த திட்டத்தை மு.க.ஸ்டாலின் நிறுத்திவிட்டார். தொழிலாளர்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவது தவறா? எதிர்க்கட்சி என்பது ஆளும் கட்சி செய்த தவறைதான் சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் நெசவு தொழிலாளர்களுக்கு இதுபோன்ற திட்டம் கொண்டு வரும்போது அதனை தடுக்க கூடாது. எதிர்க்கட்சியாக இருக்கும்போதே மக்களுக்கு நல்லத்திட்டங்களை கொண்டுவருவதை தடுக்கும் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தால் எவ்வாறு மக்களுக்கு நல்லத்திட்டங்களை கொண்டு வருவார். தி.மு.க. கட்சி குடும்ப கட்சியாக இருக்கிறது. அவர்களுக்கு மக்களை பற்றிய கவலையில்லை.

மு.க.ஸ்டாலின் துணை முதல் -அமைச்சராக இருக்கும்போது எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஆனால் தற்போது அனைத்து பகுதிகளுக்கும் சென்று மாதிரி கிராமசபை கூட்டம் நடத்தி வருகிறார். ஆட்சியில் இருக்கும் போது செய்யாததை, இப்போது எப்படி செய்வீர்கள். அதற்கான திறமை உங்களிடம் இல்லை.

இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற 3 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் கட்சிக்கு துரோகம் செய்யும்போது, அவர்கள் மீது அ.தி.மு.க. கொறடா, சபாநாயகரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதில் ஏன் மு.க.ஸ்டாலின் தலையிடுகிறார். எங்கள் உள்கட்சி விவகாரத்தில் அவர் ஏன் தலையிடுகிறார் என்று தெரியவில்லை. எங்கள் கட்சியை உடைக்கவும், ஆட்சியை கலைக்கவும் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. 18 சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருவதற்கு முக்கிய காரணமே மு.க.ஸ்டாலின் தான். இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் தலை யிடுவதன் மூலம் அவருக்கு தொடர்பு இருப்பது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.

கடந்த தி.மு.க. ஆட்சியின்போது நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக அறிவித்தனர். ஆனால் யாருக்கும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். தி.மு.க.வினர் சுடுகாட்டை கூட விட்டுவைக்காமல், அதைகூட பட்டாபோட்டு விற்று விட்டனர். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி மக்களுக்கு நல்லதிட்டங்களை கொண்டு வருவார்கள். எங்கள் ஆட்சியை கலைப்பதற்கு கடந்த 2 ஆண்டுளாக 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்களை மு.க.ஸ்டாலின் தூண்டிவிட்டுள்ளார். இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அழைத்து பேசி, அவர்களை சமாதானப்படுத்தி உள்ளோம். மக்களுக்காக நாங்கள் எதையும் செய்யவில்லை என்று சொல்லமுடியாது. அது மக்களுக்கே நன்றாக தெரியும். மக்களை ஏமாற்றி தி.மு.க.வால் ஆட்சியை பிடிக்க முடியாது.

அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் முன்னாள் எம்.எல்.ஏ.வும், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. துணை செயலாளருமான ராஜ்குமார் அவரது வீட்டில் வேலை பார்த்த பெண்ணை பலாத்காரம் செய்ததில் 10 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று சிறையில் உள்ளார். தி.மு.க.வினர் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்கிறார்கள். அதற்கு மு.க.ஸ்டாலின் கட்டபஞ்சாயத்து செய்கிறார். இவர் எதிர்க்கட்சியாக இருக்கும்போது நாட்டு மக்கள் நிம்மதியாக வாழமுடியவில்லை. ஆட்சிக்கு வந்தால் தி.மு.க. அராஜக கட்சியாக மாறிவிடும். துரைமுருகன் சூலூரில் நடந்த கூட்டத்தில் 25 நாட்களில் ஆட்சியை மாற்றி அமைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அவரது மகனையே வெற்றி பெறவைக்க முடியவில்லை. அவருடைய உறவினர் வீட்டில் இருந்து 12 கிலோ நகைகள், ரூ.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 8 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாதபோது அவர்களிடம் இவ்வளவு பணம் இருக்கிறது என்றால், ஆட்சியில் இருந்தால் எவ்வளவு பணம் இருக்கும். கரப்ஷன், கமிஷன், கலெக்‌ஷன் என்று மு.க.ஸ்டாலின் எங்களை குறித்து பேசிவருகிறார். அது தி.மு.க.வினருக்கு தான் பொருந்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து செஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரித்து பேசியபோது கூறியதாவது:-

2006-2011 தி.மு.க. ஆட்சியின் போது கடும் மின்வெட்டு இருந்தது. பின்னர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியது. தமிழகத்தில் மக்களுக்கு தேவையான 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை, நாங்கள் உற்பத்தி செய்து, மக்களுக்கு வழங்கி வருகிறோம். தமிழ்நாட்டில் சாலை வசதி உள்பட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இருப்பதால், சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடு செய்ய 304 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதன் மூலம் நேரடியாக 5 லட்சம், மறைமுகமாக 5 லட்சம் என மொத்தம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து அவர், சுல்தான்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பேசும்போது, மு.க.ஸ்டாலின் என்னை மண்புழு என்று கூறுகிறார். மண்புழு விவசாயிகளுக்கு நண்பன். நான் ஒரு விவசாயி. மு.க.ஸ்டாலின் 6 மாதத்திற்கு ஒருமுறை லண்டன் சென்று வருகிறார். அதற்கான காரணத்தை பொதுமக்களிடம் அவர் வெளியிட தயாரா? மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் மேடையில் அரசியல் பேசி வருகிறார். அவருக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? அவர் படங்களில்தான் கதாநாயகன், என்றார்.

பின்னர் செலக்கரச்சல், பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி பிரிவு ஆகிய 3 இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

நாங்கள் ஆட்சியில் இருந்து பல்வேறு மக்கள் நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம். ஆனால் தி.மு.க.சார்பில் தேர்தல் அறிக்கை என்கிற பெயரில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர்.

தென்னை விவசாயிகளுக்காக நீரா பானம் தயாரிக்க அனுமதி அளித்துள்ளோம். கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.52.50-ல் இருந்து ரூ.95.21-ஆக உயர்த்தி உள்ளோம். ரூ.2 லட்சமாக இருந்த இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளோம். இரண்டு கைகளும் இல்லாத ஒருவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் என்னை தனது இரு கரம் கூப்பி வணங்கினார். அரசு ஆஸ்பத்திரியில் இந்த அரிய சாதனையை செய்துள்ளோம்.

தி.மு.க. சரியில்லை என்று சொல்லித்தானே வைகோ வெளியே சென்றார். ஸ்டாலின் ஒரு கவுன்சிலராக இருக்கக்கூட தகுதியற்றவர் என்று கூறியவர் வைகோ. மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்டு டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் ஸ்டாலின் என்று கூறியவர் வைகோ. அவர் தி.மு.க.வுடன் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். ஆகவே அவர் தி.மு.க. வேட்பாளரா? ம.தி.மு.க.வேட்பாளரா? என்று சொல்ல வேண்டும். இடைத்தேர்தலில் 22 சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். திருவாரூர் தொகுதியில் கூட தி.மு.க. வெற்றி பெற முடியாது.

கேபிள் டி.வி. கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். ஸ்டாலின் மற்றும் தயாநிதி குடும்பத்தாருக்கு 40 டி.வி. சேனல்கள் உள்ளன. சன் குழுமம் பேக்கேஜிங் என்று கூறிக்கொண்டு 56 ரூபாயை கட்டணமாக வசூலிக்கிறார்கள். ஸ்டாலின் வந்தால் கேபிள் கட்டணம் குறைப்பதாக சொல்கிறார். அவர் தானே டிவி சேனல்களை நடத்துகிறார். அவர் குறைக்க வேண்டியது தானே. அவர்களது குடும்ப தொலைக்காட்சிகள் தான் மக்களிடம் இருந்து பணத்தை உறிஞ்சுகிறது. மக்கள் நலனுக்காக அ.தி.மு.க வை வெற்றி பெறச்செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.பி.க்கள் மகேந்திரன், ஏ.கே.செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story