அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்


அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 1 May 2019 11:00 PM GMT (Updated: 1 May 2019 8:24 PM GMT)

அரவக்குறிச்சி இடைத்தேர்தலையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் காவல்துறை தலைமை இயக்குனர் பங்கேற்றார்.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று அரவக்குறிச்சி ஐந்துரோடு அருகே உள்ள வள்ளூவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காவல்துறை தலைமை இயக்குனர் அசுதேஸ் சுக்லா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளன. மேற்கண்ட தொகுதியில் 250 வாக்குச்சாவடிகள் 159 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 36 பறக்கும் படை குழுக்கள், 18 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 11 இடங்களில் 29 வாக்குச்சாவடிகள், அங்கு நிலவும் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டும், முந்தைய தேர்தல்களில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலும் பதட்டமான வாக்குச்சாவடிகள் எவை என கண்டறியப்பட்டு அதன் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் தொகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் கடந்த மாதம் 9-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நிலுவையில் இருந்த 77 பிடி ஆணைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. 42 பேர் தேர்தலின்போது சட்டம் ஒழுங்கிற்கும் மற்றும் பொது அமைதிக்கும் ஊறு விளைவிக்க வாய்ப்பு உள்ளது என்ற காரணத்தினால் அவர்கள் மீது தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உறுதி பிணைப் பத்திரம் பெறப்பட்டு அவர்கள் காவல் துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் அத்தகைய நபர்களை கண்டறிந்து உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

புகார் மீது உரிய விசாரணை

தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக பெறப்படும் அனைத்து புகார்களின் மீதும் உரிய விசாரணை நடத்தி, எந்தவித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள் பதற்றம் நிறைந்தவை என கண்டறியப்பட்ட பகுதிகளில் அடிக்கடி ரோந்து செல்லவும், பொதுமக்கள் தேர்தலின்போது அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிப்பதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு தேவையான அளவில் நிலைக் குழுக்களும், அதிவிரைவுப் படையினர் ரோந்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் காவல்துறை தலைவர் (தேர்தல்) சேசசாய், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Next Story