நடுரோட்டில் அமர்ந்து பட்டதாரி பெண் தர்ணா - அந்தியூர் அருகே பரபரப்பு


நடுரோட்டில் அமர்ந்து பட்டதாரி பெண் தர்ணா - அந்தியூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 2 May 2019 4:30 AM IST (Updated: 2 May 2019 5:11 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே காதல் கணவரை சேர்த்து வைக்கக்கோரி பட்டதாரி பெண் நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன். இவருடைய மகள் ஹேமலதா (வயது 28). எம்.பி.ஏ. படித்து உள்ளார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த 2012-ம் ஆண்டு படித்தார். அப்போது அதே கல்லூரியில் பவானி அருகே உள்ள பூலப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்திகேயன் (28) என்பவரும் படித்து வந்தார். இதனால் ஹேமலதாவுக்கும், கார்த்திகேயனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் அவர்கள் 2 பேரும் பூலப்பாளையம் பகுதியில் தனியாக வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். தற்போது கார்த்திகேயன் கோவை அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இதனால் அவர் தினமும் கோவைக்கு சென்று வருவார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கார்த்திகேயனுக்கும், ஹேமலதாவுக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து ஹேமலதா தன்னுடைய கணவர் மீது பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார், கணவன்-மனைவி 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில், சிறிது காலம் ஹேமலதா கிருஷ்ணாபுரத்தில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டில் இருந்ததால் குடும்ப பிரச்சினை தீரும் என்று கருதிய போலீசார், அவரை அங்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கார்த்திகேயன் கோவைக்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து கணவன்-மனைவிக்கு இடையே எந்தவித தொடர்பு இல்லாமல் இருந்தது,

இந்தநிலையில் நேற்று காலை 9 மணி அளவில், பிரிந்து சென்ற கணவர் கார்த்திகேயனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஹேமலதா, கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அந்தியூர்-பர்கூர் ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர், பொதுமக்களிடம் தன்னுடைய கணவரை சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரமும் வழங்கினார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஹேமலதாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையில், கார்த்திகேயனுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹேமலதாவிடம் போலீசார் உறுதி கூறினார்கள். இதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.


Next Story