திருக்கனூர், வானூர் பகுதியில் இடி–மின்னலுடன் பலத்த மழை
திருக்கனூர், வானூர் பகுதியில் இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
திருக்கனூர்,
புதுவையில் கடந்த மாதம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிக அளவு இருந்தது. வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவானது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியுற்று வந்தனர்.
இந்த சூழ்நிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி தமிழகம், புதுவை கடற்கரை பகுதிகளில் கடக்கக்கூடும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
புயல் என்றாலே மக்கள் அஞ்சும் அளவுக்கு கடந்த காலங்களில் புதுச்சேரி பெரும் பாதிப்பை சந்தித்து இருந்தாலும், தற்போது பானி புயலால் போதிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுவை அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவசர ஆலோசனை கூட்டமும் நடத்தியது. இந்த நிலையில் தமிழகம், புதுவை கடற்கரை பகுதிகளில் கடக்கும் என்று கூறப்பட்ட பானி புயல் தற்போது திசை மாறி சென்றுவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து விட்டது.
இதனால் பானி புயல் தமிழகம், புதுவையில் கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை. இந்த புயலினால் நேரடியான பாதிப்பு எதுவும் இல்லை. இந்த புயல் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளை நெருங்கி வரும்போது, தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் புதுவை மாநிலம், திருக்கனூர், விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் சூறைக்காற்றுடனும், இடி–மின்னலுடனும் பலத்த மழை கொட்டியது.
புதுவை மாநகரில் நேற்று இரவு 7 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பலத்த சூறாவளி காற்றும் வீசியது. சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக மழை நீடித்தது.