வில்லியனூரில் முன்னாள் எம்.எல்.ஏ. மகனை காரை ஏற்றி கொல்ல முயற்சி; கணவன்–மனைவிக்கு வலைவீச்சு


வில்லியனூரில் முன்னாள் எம்.எல்.ஏ. மகனை காரை ஏற்றி கொல்ல முயற்சி; கணவன்–மனைவிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 May 2019 3:45 AM IST (Updated: 2 May 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் முன்னாள் எம்.எல்.ஏ. மகனை காரை ஏற்றி கொல்ல முயன்ற கணவன்– மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

வில்லியனூர்,

வில்லியனூரை சேர்ந்தவர் நடராஜன். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.. இவரது மகன் சரவணன்.(வயது45). வில்லியனூர் சுல்தான்பேட்டையில் அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது தொழிற்சாலைக்கு அட்டைபெட்டி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை டிரைவர் சாலை ஓரமாக நிறுத்தி இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது.இதில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. உடனே காரில் இருந்து இறங்கி வந்த கணவனும், மனைவியும் லாரியை எப்படி சாலையில் நிறுத்தம் எனகேட்டு தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் அருகில் கிடந்த கல்லை எடுத்து லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர்.பதிலுக்கு லாரி டிரைவரும் ஒரு கல்லை எடுத்து காரின் கண்ணாடியை உடைத்தார்.

அந்த நேரத்தில் தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த சரவணன் இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றார்.ஆனால் இதனை ஏற்காத அந்த தம்பதியினர் சரவணனிடமும் தகராறு செய்தனர்.இதில் வாக்கு வாதம் முற்றவே ஆவேசம் அடைந்த கணவனும், மனைவியும் காரில் ஏறி சரவணன் மீது மோதும் வகையில் வேகமாக புறப்பட்டு சென்றனர்.அப்போது அருகில் நின்றவர்கள் சரவணனை பிடித்து இழுத்துக் கொண்டதால் அவர் உயிர் தப்பினார். இருந்தபோதிலும் கார் உரசியதில் சரவணனின் வலது காலில் காயம் ஏற்பட்டது. அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து சரவணன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த கார் விழுப்புரத்தை சேர்ந்த நவீன், அவரது மனைவி ஜாய்ஸ் ஆகியோருக்கு சொந்தமான கார் என்பது தெரிய வந்தது.போலீசார் கணவன்–மனைவி இருவர் மீதும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


Next Story