மின்கம்பி மீது வைக்கோல் உரசியதில் லாரி-மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசம்


மின்கம்பி மீது வைக்கோல் உரசியதில் லாரி-மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 2 May 2019 3:30 AM IST (Updated: 2 May 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே மின்கம்பி மீது வைக்கோல் உரசியதில் லாரியும், மோட்டார் சைக்கிளும் தீயில் எரிந்து நாசமாயின.

வேளாங்கண்ணி,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது45). சின்னசேலம் தாலுகா பாக்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர்கள் இருவரும் வேளாங்கண்ணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடம் வைக்கோலை விலைக்கு வாங்கி லாரியில் ஏற்றி கொண்டு சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

லாரியை ராமு ஓட்டி வந்தார். இளங்கோவன் லாரியை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வேளாங்கண்ணி அருகே தன்னிலைப்பாடி பகுதியில் லாரி சென்று கொண்டிருந்த போது, அங்குள்ள மின்கம்பியில் வைக்கோல் உரசியது. இதனால் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயை அணைப்பதற்காக ராமு உடனடியாக லாரியை நிறுத்தினார். இந்த நிலையில் தீ மளமளவென பரவி லாரியும் தீப்பிடித்து எரிந்தது.

எரிந்து நாசம்

இளங்கோவனும் லாரி அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தீயை அணைக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்த வைக்கோல் கட்டு சரிந்து மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளிலும் தீப்பிடித்தது. இதை அறிந்த வேளாங்கண்ணி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரி மற்றும் மோட்டார் சைக்கிளில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் லாரியும், மோட்டார் சைக்கிளும் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story