கும்பகோணம் அருகே வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


கும்பகோணம் அருகே வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 May 2019 11:15 PM GMT (Updated: 1 May 2019 8:58 PM GMT)

கும்பகோணம் அருகே வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாணாதுறை பத்துக்கட்டு தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன்(வயது46). இவர் அதே பகுதியில் மளிகைகடை வைத்துள்ளார். இவருடைய மகன் அருண்(22). இவர் தனது தந்தைக்கு உதவியாக

மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். சிவசுப்பிரமணியன் கடன்தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன் விஷம் குடித்தார். இதனால் உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறிய சிவசுப்பிரமணியனை அவரது குடும்பத்தினர் நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

வீட்டில் சிவசுப்பிரமணியன் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது இரவு சுமார் 8.30 மணியளவில் திடீரென அவரது வீட்டின் முன் மோட்டார் சைக்கிள்கள் வந்து நின்றன. மோட்டார் சைக்கிளில் இருந்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய மர்ம நபர்கள் சிவசுப்பிரமணியன் வீட்டுக்குள் புகுந்து அவருடைய மகன் அருணை வெட்டினர். இதனால் ரத்த வெள்ளத்தில் அருண் கீழே விழுந்தார். உடனே சம்பவ இடத்தில் இருந்து மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அருணை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கிருந்த சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பணத்தகராறில் இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்தது. வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story