சூளகிரி அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி


சூளகிரி அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 1 May 2019 10:45 PM GMT (Updated: 1 May 2019 9:08 PM GMT)

சூளகிரி அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது மாரண்டபள்ளி கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள், குளங்கள், ஏரிகள் அனைத்தும் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன. இதன் காரணமாக இக்கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் குடிப்பதற்கே தண்ணீர் இன்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆழ்துளை குழாயில் பல மணி நேரம் காத்திருந்து பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கின்றனர். இருப்பினும் குறைந்த அளவிலேயே தண்ணீர் விழுகிறது. இதன் காரணமாக அருகில் உள்ள கிராமங்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய அவல நிலை உள்ளது.

மேலும் கிராம மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

எனவே, இப்பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story