ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை - துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை - துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 May 2019 11:00 PM GMT (Updated: 1 May 2019 9:38 PM GMT)

தர்மபுரி நகருக்குள் ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தர்மபுரி,

தர்மபுரி நகருக்குள் ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த விதிமுறைகளை பொதுமக்களும், போலீசாரும் பின்பற்றவில்லை.

இந்த நிலையில் தர்மபுரி நகரில் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் ஓட்டி வரும் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக தர்மபுரி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தர்மபுரி நகருக்குள் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விதிமுறைகள் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும். அன்று முதல் போலீசார் மூலம் வாகன தணிக்கை செய்யப்படும். அப்போது ஹெல்மெட் அணியாமல் இருந்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் வரிசைப்படுத்தி நிறுத்தப்படும்.

வாகனத்தை ஓட்டி தங்கள் வாகனம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் தாங்களே கோர்ட்டுக்கு சென்று ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த காரணத்தை மனுவாக வக்கீல் மூலம் தாக்கல் செய்து பரிகாரம் தேடி தகுந்த ஆணையுடன் வந்தால் மட்டுமே வாகனம் ஒப்படைக்கப்படும். கோர்ட்டு உத்தரவு கிடைக்கும் வரை தங்கள் வாகனம் பாதுகாப்பாக வைக்கப்படும் என்பதை உறுதி செய்வோம். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்ததற்கு எந்த அபராதமும் இல்லை. கோர்ட்டு ஆணை பெற்று வந்தால் மன்னித்து வாகனம் திரும்ப ஒப்படைக்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story