சேவூர் அருகே அனுமதியின்றி மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் - கனிம வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


சேவூர் அருகே அனுமதியின்றி மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் - கனிம வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 1 May 2019 10:46 PM GMT (Updated: 1 May 2019 10:46 PM GMT)

சேவூர் அருகே அனுமதியின்றி மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் செய்து கனிம வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சேவூர்,

சேவூர் அருகே உள்ள கிராம புறங்களில் குளம், குட்டைகளில் இரவு நேரங்களில் அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகள் கனிம வளத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சேவூர் அருகே முறியாண்டாம்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், போத்தம்பாளையம், சேவூர் ஆகிய கிராம பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் அனுமதியின்றி இரவு நேரங்களில் லாரிகள் மூலமாக மண் அள்ளிச் சென்று அவற்றை விற்பனை செய்யும் தொழிலில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக தேர்தல் பறக்கும் படையினர் சேவூர் அருகே முறியாண்டாம்பாளையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது அப்பகுதியில் உள்ள குளத்தில் அனுமதியின்றி இரவு நேரத்தில் மண் அள்ளிக்கொண்டிருந்தனர்.

தேர்தல் பறக்கும் படையினர் வருவதை கண்டதும் குளத்தில் மண் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் அவர்கள் வந்த லாரியையும், பொக்லைன் எந்திரத்தையும் விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அந்த லாரியையும், பொக்லைன் எந்திரத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ஆனால் 15 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து அவினாசி மற்றும் சேவூர் பகுதிகளில் தொடர்ந்து அனுமதியின்றி மண் திருட்டு நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை துணை இயக்குனர் சக்திவேல் தலைமையில் குழுவினர் அவினாசி மற்றும் சேவூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை மேற்கொண்டனர்.

இதில் சேவூர், தண்ணீர் பந்தல்பாளையம், போத்தம்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளில் அனுமதியின்றி முறைகேடாக மண் அள்ளுவது தெரியவந்தது. இதையடுத்து மண்ணுடன் 3 டிப்பர் லாரிகள், மற்றும் மண் அள்ளப்பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை கனிம வளத்துறையினர் பறிமுதல் செய்து அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அனுமதியின்றி மண் எடுப்பது யார்?, அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரத்தை தாசில்தார் மற்றும் அலுவலக ஊழியர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் அவினாசி தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாள் அனுமதியின்றி மண் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று சேவூர் போலீஸ் நிலையத்தில் கேட்டபோது மண் திருட்டு சம்மந்தமாக அவினாசி தாசில்தார் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.


Next Story