சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 1 May 2019 11:30 PM GMT (Updated: 1 May 2019 10:51 PM GMT)

சபாநாயகர் மீது தி.மு.க. கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர் கொள்ள தயாராக உள்ளோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

திருவொற்றியூர்,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.ரோட்டில் மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்ட புதிய ஆட்டோ நிறுத்தத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர், ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து சிறிதுதூரம் ஆட்டோவை ஒட்டிச்சென்று, ஆட்டோ டிரைவர்களை உற்சாகப்படுத்தினார்

அதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:–

அ.தி.மு.க. ஆட்சி பறிபோய்விடும் என்ற பயத்தில் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா? என கேட்கிறீர்கள். ஆனால் அ.தி.மு.க.வுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது.

3 எம்.எல்.ஏ.க்களும் கட்சிக்கு விரோதமான செயலில் ஈடுபட்டதால்தான் தகுந்த ஆதாரத்தோடு அவர்கள் மீது கொறடா புகார் அளித்து உள்ளார். 3 பேரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்பது சபாநாயகரின் கையில்தான் உள்ளது.

சபாநாயகர் மீது தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்திருப்பதை ஏற்க முடியாது. தூங்கி எழுந்தால் தீர்மானம் கொண்டு வருகிறார்கள். எனினும் இந்த தீர்மானத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

இந்த விவகாரத்தில் விரோதமும், துரோகமும் ஒன்றிணைந்து விட்டது. டி.டி.வி.தினகரனுக்கு தேள் கொட்டினால், மு.க.ஸ்டாலினுக்கு நெறி கட்டுகிறது.

ஏற்கனவே மு.க.ஸ்டாலின் சட்டையை கிழித்துக்கொண்டு வந்ததை போல்தான் திரும்பவும் சட்டையை கிழித்துக்கொள்ள தயாராகிவிட்டதாகவே நினைக்கிறேன். எத்தனை ஜூன் மாதம் வந்தாலும் அ.தி.மு.க.தான் ஆட்சியில் இருக்கும்.

அவ்வாறு அ.தி.மு.க. அரசு ஆட்சியில் இருக்கும்பட்சத்தில் துரைமுருகன் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா?. கட்சியில் இருந்து விலகுவாரா?.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story