நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு கர்நாடகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுவது உறுதி - எடியூரப்பா சொல்கிறார்


நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு கர்நாடகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுவது உறுதி - எடியூரப்பா சொல்கிறார்
x
தினத்தந்தி 1 May 2019 11:06 PM GMT (Updated: 1 May 2019 11:06 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு கா்நாடகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுவது உறுதி என்று பா.ஜனதா தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதையடுத்து, பெங்களூரு சதாசிவநகாில் உள்ள, அவரது வீட்டுக்கு எடியூரப்பா சென்றார். பின்னர் அவர், எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார். எடியூரப்பாவுடன், முன்னாள் துணை முதல்-மந்திரி அசோக், அரவிந்த் லிம்பாவளி மற்றும் பா.ஜனதா முக்கிய தலைவர்கள் சென்று எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா. கர்நாடகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர். அவருக்கு பிறந்தநாள் என்பதால் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தேன். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் எஸ்.எம்.கிருஷ்ணா பிரசாரம் செய்திருந்தார். இது பா.ஜனதாவுக்கு யானை பலத்தை கொடுத்தது. எஸ்.எம்.கிருஷ்ணாவின் சேவை, பா.ஜனதாவுக்கும், நமது மாநிலத்திற்கும் இன்னும் தேவை.

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 22 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும். ஒட்டு மொத்தமாக 290-க்கும் மேற்பட்ட தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு கர்நாடகத்தில் அரசியலில் மாற்றம் ஏற்படுவது உறுதி. அது எந்த விதமான மாற்றம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

முன்னதாக எஸ்.எம்.கிருஷ்ணா நிருபர்களிடம் கூறுகையில், ‘பொதுவாக எனது பிறந்தநாளில் பெங்களூருவில் இருக்க மாட்டேன். இந்த ஆண்டு பெங்களூருவில் இருந்தேன். எனது பிறந்தநாளுக்கு எடியூரப்பா நேரில் வந்து வாழ்த்து கூறுவார் என்று நினைக்கவில்லை. அவர் எனது வீட்டுக்கு வந்து வாழ்த்து கூறியது மகிழ்ச்சியாக உள்ளது.

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகின்றனர். எனது விரும்பமும் அது தான். அவர் மீண்டும் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை இருக்கிறது,’ என்றார்.

Next Story