விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான போட்டித்தேர்வு - கடலூரில் 9-ந்தேதி நடக்கிறது
விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான போட்டித்தேர்வு கடலூரில் 9-ந்தேதி நடக்கிறது. இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்கும் இட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
அதன்படி மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகளும், ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் மாணவிகளுக்கான விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த விளையாட்டு விடுதியில் சேர்வதற்கு 7, 8, 9 மற்றும் 11 ஆகிய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தேர்வு வருகிற 9-ந் தேதி காலை 7 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
இதில் தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஆக்கி, நீச்சல், டேக்வாண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபடி, மேஜைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுகள் மாணவர்களுக்கும், தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, ஆக்கி, நீச்சல், டேக்வாண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபடி, டென்னிஸ், ஜூடோ மற்றும் ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகள் மாணவிகளுக்கும் நடக்கிறது.
மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ-மாணவிகள் உரிய படிவத்தை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விளையாட்டில் ஆர்வமும், துடிப்பும் உள்ள மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story