கலசபாக்கம் அருகே ரூ.50 லட்சம் கேட்டு, தொழிலதிபரை கடத்திய 5 பேரை சினிமா பாணியில் சுற்றிவளைத்த போலீசார்


கலசபாக்கம் அருகே ரூ.50 லட்சம் கேட்டு, தொழிலதிபரை கடத்திய 5 பேரை சினிமா பாணியில் சுற்றிவளைத்த போலீசார்
x
தினத்தந்தி 1 May 2019 11:30 PM GMT (Updated: 1 May 2019 11:31 PM GMT)

கலசபாக்கம் அருகே ரூ.50 லட்சம் கேட்டு தொழிலதிபரை கடத்திச்சென்ற 5 பேரை போலீசார் சினிமாபாணியில் சுற்றிவளைத்து மடக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம், கார்கள், செல்போன், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள வில்வாரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 44). மரச்செக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி குணா (24). சரவணன் கடந்த 28-ந் தேதி திருவண்ணாமலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்பு அவர் வீடுதிரும்பவில்லை. அவரை பல இடங்களில் குடும்பத்தினரும், உறவினர்களும் தேடிப்பார்த்தனர். எனினும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சரவணன் மாயமானது குறித்து கலசபாக்கம் போலீசில் நேற்று முன்தினம் அவரது மனைவி குணா புகார் செய்தார்.

இந்த நிலையில் சரவணனின் மனைவியை தொடர்பு கொண்ட மர்மநபர்கள் “உனது கணவர் சரவணனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். ரூ.50 லட்சம் கொடுத்தால் தான் விடுவோம்” என்றனர். அதற்கு குணா “தற்போது அவ்வளவு பெரிய தொகை என்னிடம் இல்லை” என்று கூறி உள்ளார். அதனை கேட்ட மர்மநபர்கள் “ரூ.15 லட்சம் ஏற்பாடு செய்து புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே வந்து கொடு” என்று கூறி உள்ளனர். இதை நம்பிய குணா ரூ.15 லட்சம் தயார் செய்து கோவில் அருகே வந்து நின்றிருந்தார்.

அப்போது அங்கு காரில் வந்த 2 நபர்கள் குணா வைத்திருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு மீதம் உள்ள பணத்தை தயார் செய்து கொடுத்தால் தான் சரவணன் வீடு திரும்புவார் என்று கூறிவிட்டு சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த குணா அது குறித்து கலசபாக்கம் போலீசி ல்புகார் செய்தார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆள்கடத்தல் பிரிவின்கீழ் வழக்கை மாற்றினர்.

பின்னர் சரவணனை பத்திரமாக மீட்க அதிரடி வியூகம் அமைக்கப்பட்டது. இதற்காக போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, குத்தாலிங்கம் இன்ஸ்பெக்டர்கள் சாரதி, சுப்பிரமணி, ராஜா உள்பட மொத்தம் 21 போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

குற்றவாளிகள் பேசிய செல்போன் எண்ணை கண்காணித்து அவர்களை போலீசார் பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். இதற்காக அவர்களது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு மீதம் உள்ள பணத்தை கொடுப்பதாகவும், செங்கம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்து வாங்கிக்கொள்ளும்படியும் போலீசார் கூறினர். அங்கு சரவணனின் மனைவியிடம் ஒரு பையை கொடுத்து நிற்க வைத்தனர். போலீசாரும் மாறுவேடத்தில் அங்கு கண்காணித்தனர்.

அந்த அதிரடியில் சினிமா பாணியில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சரவணனையும் பத்திரமாக மீட்டனர். மேலும் குற்றவாளிகள் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள், குற்றவாளிகளின் 6 செல்போன்கள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள், குணாவிடம் இருந்து பெற்ற ரூ.15 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.

சரவணன் மீட்கப்பட்டது குறித்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சரவணன் கடத்தப்பட்டது குறித்த புகார் வந்தவுடன் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடத்தல் உண்மையா? நாடகமா? என விசாரணை நடத்தியதில் சரவணன் கடத்தப்பட்டது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க வேண்டும். அதைவிட சரவணனுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மீட்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

இதற்காக எனது தலைமையில் 21 போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளிகளின் செல்போன் எண்களை கண்காணித்தோம்.

இதையடுத்து ரூ.25 லட்சத்தை கொடுப்பதாக கூறி குணாவை வைத்து குற்றவாளிகளுக்கு வலைவீசினோம். அதன்படி இன்று (நேற்று) காலை 9 மணிக்கு செங்கம் அருகே உள்ள பெட்ரோல் பங்க்குக்கு அவர்களை வரவழைத்து பிடிக்க முடிவு செய்தோம். அதன்படி பெட்ரோல் பங்க் அருகே சரவணனின் மனைவி குணாவிடம் பையை கொடுத்து நிற்க வைத்தோம். ஆனால் பையில் பணம் எதுவும் கொடுக்கவில்லை.

அப்போது ஒருகாரில் வந்த நபர் குணாவிடம் பேசினார். அந்த நபர் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என உறுதி செய்த பின்பு அங்கு சாதாரண உடையில் மறைந்திருந்த போலீசார் சுற்றிவளைத்து அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த அன்சர்அலி (30) என்பதும், அவரின் கூட்டாளிகள் திருவண்ணாமலையை சேர்ந்த சையத் முஸ்தபா (35), தஸ்தகீர் (23), இம்தியாஸ் (35), துரைபாண்டியன் (25) என்பதும் அனைவரும் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது.

சரவணிடம் பணம்இருக்கும் என்று அவர்கள் நினைத்து அவரை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அன்சர்அலியை தூண்டியில் இரையாக பயன்படுத்தி அந்த கும்பலை கைது செய்யவும், சரவணனை மீட்கவும் போலீசார் முடிவு செய்தனர்.

பின்னர் அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி குற்றவாளிகளிடம் அவரை பேச வைத்து நெருங்கினர். ஒரு கட்டத்தில் அவர்கள் அன்சர்அலி, போலீஸ் வாகனத்தில் இருப்பதை சந்தேகத்தின்பேரில் உணர்ந்தனர். அது குறித்து அவர்கள் கேட்கவே போலீசார் சாமர்த்தியமாக செயல்பட்டு அன்சர்அலியை அவரது காருக்கு மாற்றி பேச வைத்தனர்.

அந்த கும்பல் அனைவரும் வேட்டவலம் பகுதியில் காரில் சுற்றுவது தெரியவந்தது. அவர்களின் செல்போன் எண் கண்காணிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் உஷாரான அவர்கள் அனைவரும் செல்போனை ‘சுவிட்ச் ஆப்’செய்து விட்டனர். எனினும் சோர்ந்து விடாமல் வேட்டவலம் வழியாக தான் அவர்கள் வர வாய்ப்புள்ளதை அறிந்து வேட்டவலம் போலீசாரை உஷார்படுத்தினர்.

அதன்படி திருவண்ணாமலை- விழுப்புரம் நெடுஞ்சாலையில் பால் கூட்டுறவு சங்கம் அருகே பஸ் நிறுத்துமிடத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மதன்குமார், ரவி மற்றும் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அங்கு வந்த காரை மடக்கி பிடித்து சரவணனை மீட்டனர். பின்னர் தனிப்படை போலீசார் அங்கு சென்று அனைவரையும் கைது செய்தோம். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், சரவணனை கடத்தியவர்கள் 3 நாட்கள் விழுப்புரம், ஊத்துக்கோட்டை என பல்வேறு இடங்களில் காரிலே வைத்து சுற்றிஉள்ளனர். உரிய நேரத்தில் விவேகமாக செயல்பட்டதால் சரவணனை உயிரோடு மீட்க முடிந்தது. இந்த ஆபரேசனில் ஈடுபட்டு திறமையை வெளிக்காட்டிய போலீசாரை விருதுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கூடுதல் சூப்பிரண்டு வனிதா, கடத்தப்பட்ட சரவணன் ,அவரது மனைவி குணா ஆகியோர் உடன்இருந்தனர்.

சரவணன் நிருபர்களிடம் கூறும்போது, யஎஎன்னை அவர்கள் உயிரோடுவிடமாட்டார்கள் என நினைத்தேன். என்னை கொன்றால் உடலை வேறு எங்காவது புதைத்து விடுவார்கள். எனது குடும்பத்தினரிடம் போய் சேராது என நினைத்து காரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். எனினும் என்னால் கார் கண்ணாடியை உடைக்க முடியவில்லை. எனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். என்னை பேசவிடவில்லை. மதுவாங்கி என்னை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தனர். அவர்கள் உருது மொழியில் பேசிக்கொண்டதால் என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியவில்லை” என்றார்.

தொழிலதிபரை மீட்டு கடத்தல் கும்பலை போலீசார் அதிரடியாக செயல்பட்டு சினிமாபாணியில் மடக்கிப்பிடித்து கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story