‘பானி’ புயல் எதிரொலி: திருவொற்றியூர், எண்ணூரில் கடல் சீற்றம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை


‘பானி’ புயல் எதிரொலி: திருவொற்றியூர், எண்ணூரில் கடல் சீற்றம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை
x
தினத்தந்தி 2 May 2019 10:30 PM GMT (Updated: 2 May 2019 4:39 PM GMT)

‘பானி’ புயல் காரணமாக திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் 6 நாட்களாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

திருவொற்றியூர்,

வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘பானி’ புயல் இன்று(வெள்ளிக்கிழமை) ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக வடசென்னை கடலோர பகுதிகளில் காற்று பலமாக வீசுகிறது.

திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக கடல் அலைகள் சீற்றத்துடன் ஆக்ரோஷமாக கடல் அரிப்பு தடுப்பு சுவரையும் தாண்டி சாலையில் வந்து விழுகின்றன. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனால் திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைபர் படகு மற்றும் கட்டுமரம், மீன்பிடி வலைகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் கொண்டு வந்து வைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

குறிப்பாக பாரதியார் நகர், நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், சின்னக்குப்பம், பெரியக்குப்பம், காசி விஸ்வநாதர் கோவில் குப்பம், திருச்சினாங்குப்பம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக கடந்த 6 நாட்களாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

புயல் கரையை கடந்த பிறகே கடலில் அமைதி ஏற்படும். அதுவரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல முடியாத நிலை உள்ளதால் வருத்தம் அடைந்து உள்ளனர்.

தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் பைபர் மற்றும் கட்டு மரங்களில் சென்றுதான் மீனவர்கள் சிறிய வகை மீன்களை பிடித்து வந்தனர். தற்போது ‘பானி’ புயல் காரணமாக 6 நாட்களாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாததால் சிறிய வகை மீன்கள் கூட கிடைக்காமல் மீன்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.


Next Story