திருக்கனூர் பகுதியில் சூறாவளிக்காற்று 50 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள் சாய்ந்தன விவசாயிகள் அதிர்ச்சி


திருக்கனூர் பகுதியில் சூறாவளிக்காற்று 50 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள் சாய்ந்தன விவசாயிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 3 May 2019 3:00 AM IST (Updated: 3 May 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

திருக்கனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் வீசிய சூறாவளிக்காற்றில் 50 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம் அடைந்தன. அதனால் விவசாயிகள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர்.

திருக்கனூர்,

புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் திடீரென பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இந்த காற்றும் மழையும் திருக்கனூர், வில்லியனூர் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது. திருக்கனூரையொட்டியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.

திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான வயலில் சுமார் ஒரு ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்தன.

இது தவிர கூனிச்சம்பட்டு சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 50 ஏக்கர் நிலத்துக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து, சாய்ந்து விழுந்துவிட்டன. அதனால் வாழை பயிரிட்ட விவசாயிகள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தனர். அதேபோல் நரசிம்மன் என்பவருக்கு சொந்தமான தோப்பில் உள்ள மாமரங்களில் இருந்து பலத்த காற்றின் காரணமாக மாங்காய்கள் உதிர்ந்து விழுந்துவிட்டன. அதனால் அவர் கவலை அடைந்தார்.

கூனிச்சம்பட்டு சாலையில் இருந்த உயர் அழுத்த மின்கம்பத்தின் மேல் தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. அதனால் அந்த பகுதியில் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. நேற்று மாலை வரை மின்சார வினியோகம் சரிசெய்யப்படவில்லை. அதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

இந்த சூறாவளிக்காற்றின் காரணமாக சாய்ந்து விழுந்த வாழை மரங்கள், பாதிக்கப்பட்ட மாங்காய் விளைச்சல், மரவள்ளிக்கிழங்கு விளைச்சல் உள்ளிட்டவற்றுக்கு அரசு தகுந்த இழப்பீடு வழங்கி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
1 More update

Next Story