விழப்பள்ளத்தில் ஜல்லிக்கட்டு: காளைகளை போட்டி போட்டு அடக்க முயன்ற 8 வீரர்கள் காயம்


விழப்பள்ளத்தில் ஜல்லிக்கட்டு: காளைகளை போட்டி போட்டு அடக்க முயன்ற 8 வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 2 May 2019 11:00 PM GMT (Updated: 2 May 2019 8:01 PM GMT)

விழப்பள்ளத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை போட்டி போட்டு அடக்க முயன்ற 8 வீரர்கள் காயம் அடைந்தனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள விழப்பள்ளம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி அந்த கிராமத்தில் உள்ள புனித செபஸ்டியர் ஆலயத்தில் வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் ஆலயத்தின் அருகே அமைக்கப்பட்டு இருந்த வாடிவாசலில் முதல் காளையாக அலங்கரிக்கப்பட்ட புனித செபஸ்டியர் ஆலய காளை அவிழ்த்துவிடப்பட்டது. பின்னர் மற்ற ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டது.

இதில் ஜெயங்கொண்டம், சின்னவளையம், பெரியவளையம், கல்லேரி, கல்லாத்தூர், பூவாயிக்குளம், தேவாமங்கலம், பூவாணிபட்டு, குமுழியம், பரணம், ஆண்டிமடம், தா.பழூர், சுத்தமல்லி, மீன்சுருட்டி, வெண்ணங்குழி, வில்வகுளம், முதுகுளம், பாப்பாக்குடி, அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, மதுரை, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 519 காளைகள் பங்கேற்றன. அதனை அடக்க 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி, போட்டு அடக்கினர்.

அப்போது பார்வையாளர்கள் விசில் அடித்தும், கைகளை தட்டியும் வீரர்களை உற்சாகப்படுத்தினர். இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் அவர்களை முட்டி கீழே தள்ளியும், தூக்கி எறிந்தும் ஆக்ரோஷமாக எல்லைக்கோட்டை கடந்து சென்றன. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 8 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழுவினர் சார்பில் தங்க காசுகள், சைக்கிள், கட்டில், பீரோ, மின்விசிறி, குக்கர், சில்வர் பாத்திரங்கள், செல்போன், கடிகாரம், டி.வி., நாற்காலி, டைனிங் டேபிள் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். அரியலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி ஆகியோர் மேற்பார்வையில், ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், மணிவண்ணன், ஜெகதீஸ், மலைச்சாமி, சந்திரகலா ஆகியோர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story