காவேரிப்பாக்கம் அருகே, கன்டெய்னர் லாரி மீது கார் மோதி 2 வியாபாரிகள் பலி


காவேரிப்பாக்கம் அருகே, கன்டெய்னர் லாரி மீது கார் மோதி 2 வியாபாரிகள் பலி
x
தினத்தந்தி 3 May 2019 4:30 AM IST (Updated: 3 May 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கம் அருகே நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில் சென்னையை சேர்ந்தவர் உள்பட 2 கருவேப்பிலை வியாபாரிகள் பலியானார்கள்.

காவேரிப்பாக்கம்,

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் கோபி (வயது 23). கருவேப்பிலை வியாபாரி. இவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கருவேப்பிலை வியாபாரியான சங்கரப்பா என்பவரும் வியாபார நிமித்தமாக ஆந்திர மாநிலத்திற்கு சென்று வர முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு அவர்கள் காரில் புறப்பட்டனர். காரை சென்னை கொளத்தூரை சேர்ந்த டிரைவர் ராஜா (25) ஓட்டினார்.

அவர்களது கார் ஸ்ரீபெரும்புதூர் வழியாக நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த சிறுகரும்பூர் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணிக்கு வந்தபோது, கார் நான்குவழிச்சாலையில் செல்லாமல் திடீரென லாரிகள் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த அணுகுசாலைக்கு திரும்பியது. இந்த நிலையில் வேகமாக சென்ற கார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரிலிருந்த கருவேப்பிலை வியாபாரிகளான கோபி, சங்கரப்பா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காரை ஓட்டி வந்த ராஜா, படுகாயத்துடன் துடிதுடித்துக்கொண்டிருந்தார். விபத்து குறித்து அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் டிரைவர் ராஜாவை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த கோபி மற்றும் சங்கரப்பா உடல்களை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story