தொழிலாளியை அடித்து கொன்ற வழக்கில் பட்டறை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு வாக்குமூலம்


தொழிலாளியை அடித்து கொன்ற வழக்கில் பட்டறை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 2 May 2019 10:45 PM GMT (Updated: 2 May 2019 8:31 PM GMT)

தொழிலாளியை அடித்து கொன்ற வழக்கில் பட்டறை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசில் பட்டறை உரிமையாளர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சங்ககிரி,

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கூலகவுண்டனூரில் லாரி பெயிண்டு பட்டறை தொழிலாளி ஜெபஸ்டின் (வயது 19) என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி அந்த பட்டறை உரிமையாளர் வீரமணிகண்டன் மற்றும் முருகேசன், பிரபாகரன், வெங்கடேஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து லாரி பெயிண்டு பட்டறை உரிமையாளர் வீரமணிகண்டன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனக்கு சொந்த ஊர் திருச்செங்கோடு அருகே உள்ள குட்டிமேய்க்கம்பட்டி ஆகும். 7-ம் வகுப்பு வரை திருச்செங்கோடு அரசு பள்ளியில் படித்தேன். படிப்பு சரியாக வரவில்லை. இதனால் எனது தந்தை லாரி பட்டறையில் என்னை வேலைக்கு சேர்த்து விட்டார். 2007-ம் ஆண்டு சங்ககிரி ஆவரங்கம்பாளையம் கூலகவுண்டனூரில் லாரி பெயிண்டு பட்டறை வைத்து நடத்தி வருகிறேன். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த நாகஜோதியை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு கணேஷ், வெற்றிவேல் ஆகிய மகன்கள் உள்ளனர்.

எனது லாரி பட்டறையில் தர்மபுரியை சேர்ந்த முருகேசன், சங்ககிரி நல்லப்பன்நாய்க்கன் தெரு வெங்கடேஷ், சங்ககிரி மலையடிவாரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் வேலை செய்து வந்தனர்.

புதுச்சேரியை சேர்ந்த செல்வம் எனது பட்டறைக்கு வந்து போனதால் பழக்கம் ஆனார். செல்வம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவருடைய மகன் ஜெபஸ்டினை எனது பட்டறைக்கு அழைத்து வந்து வேலைக்கு சேர்த்து விட்டு சென்றார். ஜெபஸ்டின் சாப்பிட்டு விட்டு அங்கேயே படுத்து கொள்வான். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு சென்று வருவான்.

கடந்த மாதம் 15-ந்தேதி பட்டறையில் வைத்து இருந்த ரூ.2,500-ஐ காணவில்லை. நீ எடுத்தாயா? என ஜெபஸ்டினை கேட்டபோது நான்எடுக்கவில்லை என கூறிவிட்டான். நானும் விட்டு விட்டேன். கடந்த 28-ந்தேதி பட்டறையில் வைத்து இருந்த ரூ.8500-ஐ காணவில்லை. பட்டறையில் இருந்த அனைவரிடமும் விசாரித்தேன். யாரும் எடுக்கவில்லை என கூறிவிட்டனர்.

எனக்கு ஜெபஸ்டின் மீது சந்தேகம் இருந்து வந்தது. 1-ந்தேதி இரவு 9 மணிக்கு பட்டறையில் வேலை செய்யும் முருகேசன், பிரபாகரன், வெங்கடேஷ் ஆகிய 3 பேரையும் வரவழைத்து சாப்பாடு வாங்கி வர சொல்லி சாப்பிட்டு விட்டு ஜெபஸ்டினை பார்த்து இவன் தான் பணத்தை எடுத்து இருப்பான், சொல்ல மாட்டேன் என்கிறான், இவன் சொல்லவில்லை என்றால் முடித்து விடலாம் என கூறினேன். பட்டறையில் வேலைசெய்யும் அனைவரும் நீங்கள் சொல்கிற மாதிரியே பண்ணி விடலாம் என கூறினர்.

ஜெபஸ்டினை பார்த்து பணத்தை எடுத்தாயா? இல்லையா? என கேட்டபோது இல்லை என கூறினான். நான் பட்டறையில் கிடந்த இரும்பு பைப்பை எடுத்து வந்து முதுகில் தாக்கினேன். முருகேசன் பெல்டாலும், வெங்கடேஷ் தடியாலும், பிரபாகரன் பிளாஸ்டிக் பைப்பாலும் ஜெபஸ்டினை மாறி மாறி தாக்கினார்கள்.

ஜெபஸ்டின் பணத்தை எடுக்கவில்லை என கத்தினான். பக்கத்து பட்டறை வாட்சுமேன் காவேரி வந்து பார்த்து விட்டு போனார். சிறிதுநேரம் கழித்து ஜெபஸ்டின் எங்களிடம் இருந்து தப்பித்து பக்கத்து பட்டறைக்கு ஓடினான்.

நாங்கள் 4 பேரும் துரத்தி சென்று பிடித்து வந்து பட்டறையில் உள்ள இரும்பு தூணில் ஓடி போகாதவாறு கை, கால்களை கயிற்றால் கட்டிபோட்டு மாறி மாறி மீண்டும் தாக்கினோம். பின்னர் காலையில் பார்த்து கொள்ளலாம் என அங்கேயே படுத்து துாங்கிவிட்டோம். காலை எழுந்து பார்த்தபோது மயக்கமாகி கிடந்தான். சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து டாக்டரிடம் காட்டியபோது இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.

இவ்வாறு வீரமணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story