மதுரை அருகே மினி லாரி மீது பஸ் மோதியதில் பாதயாத்திரை வந்த 2 பெண் துறவிகள் பலி - 4 பேர் படுகாயம்


மதுரை அருகே மினி லாரி மீது பஸ் மோதியதில் பாதயாத்திரை வந்த 2 பெண் துறவிகள் பலி - 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 3 May 2019 4:30 AM IST (Updated: 3 May 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே நான்கு வழிச்சாலையில் மினி லாரி மீது சுற்றுலா பஸ் மோதிய விபத்தானது, பாதயாத்திரையாக வந்த ஜெயின் மத பெண் துறவிகள் 2 பேரை பலிவாங்கிவிட்டது. மேலும் 3 பெண் துறவிகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சோழவந்தான்,

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜெயின் மத பெண் துறவிகள் 5 பேர், கர்நாடக மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி செல்வதற்காக பாதயாத்திரையாக வந்து கொண்டிருந்தனர்.

நேற்று முன்தினம் இரவில் அவர்கள், மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள நகரி பகுதிக்கு வந்தனர். அங்குள்ள தனியார் பால் பண்ணையில் இரவில் தங்கினர். பின்னர் நேற்று அதிகாலை 5 பெண் துறவிகளும் மீண்டும் தங்களது பாதயாத்திரையை தொடர்ந்தனர். நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னால் அவர்களுடைய பொருட்களை ஏற்றி வந்த மினி லாரி வந்து கொண்டிருந்தது.

துறவிகள் நகரியில் இருந்து ½ கி.மீ. தூரம் பாதயாத்திரையாக சென்ற நிலையில், அவ்வழியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து வந்த சுற்றுலா பஸ் எதிர்பாராதவிதமாக துறவிகளின் மினி லாரி மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய அந்த மினி லாரி முன்னால் பாதயாத்திரையாக சென்ற 5 பெண் துறவிகள் மீது மோதியது. பின்னர் அந்த மினி லாரி சாலையோரம் கவிழ்ந்தது. அந்த சுற்றுலா பஸ், நான்கு வழிச்சாலையின் மத்தியில் உள்ள சுவரில் மோதி நின்றது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பாதயாத்திரை வந்த பெண் துறவிகளான சாத்வி (வயது 45), பிரிய தர்ஷிகா(52) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும் அவர்களுடன் வந்த துறவிகளான மஞ்சுளா, மிருது, ரஞ்சனா மற்றும் மினி லாரி டிரைவர் சக்கரவர்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பலியான 2 பெண் துறவிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுற்றுலா பஸ் டிரைவர் செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story