புத்தளம் அருகே துணிகரம் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு


புத்தளம் அருகே துணிகரம் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 3 May 2019 3:45 AM IST (Updated: 3 May 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

புத்தளம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலகிருஷ்ணன்புதூர்,

புத்தளம் அருகே கீழகிருஷ்ணன்புதூரை சேர்ந்தவர் ராஜப்பா. இவரது மனைவி பத்மாவதி (வயது 61). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். ராஜப்பா ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் பத்மாவதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டின் முன்பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர் பத்மாவதியை நெருங்கி சென்றார். பின்னர் திடீரென அவருடைய கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். சுதாரித்துக்கொண்ட பத்மாவதி தங்க சங்கிலியை இறுக்கமாக பிடித்து கொண்டு கொள்ளையனுடன் போராடினார். கொள்ளையனும் விடாமல் நகையை பறிப்பதில் தீவிரம் காட்டினான்.

இரண்டு துண்டுகளாக அறுந்தது

இந்த போராட்டத்தில் தங்க சங்கிலி இரண்டு துண்டுகளாக அறுந்து ஒரு பவுன் நகை கொள்ளையன் கையில் சிக்கியது. மீதி நகை பத்மாவதிக்கு கிடைத்தது.

கையில் கிடைத்த 1 பவுன் நகையுடன் கொள்ளையன் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றான். இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வருவதற்குள் கொள்ளையன் மாயமாகி விட்டான்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் மர்மநபர் நகை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story