கந்து வட்டி கொடுமையால் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற கட்டிட மேஸ்திரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு


கந்து வட்டி கொடுமையால் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற கட்டிட மேஸ்திரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 May 2019 11:00 PM GMT (Updated: 2 May 2019 9:03 PM GMT)

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமை தாங்கமுடியாமல் கட்டிட மேஸ்திரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

செங்கம் தாலுகா காயம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன், கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். இங்கு ‘போர்டிகோ’ முன்பு சென்று பையில் மறைத்து வைத்து இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து மனைவி, மகன்கள் மீது ஊற்றிய பின்னர் தன் மீதும் அதே மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கூறுகையில், அதிர்ச்சியான தகவல்கள் வெளியாயின. மணிவண்ணன் கட்டிட காண்டிராக்ட் எடுத்து கட்டிட வேலை செய்து வருகிறார். தொழில் விருத்திக்காக செங்கம் அருகில் உள்ள தோக்கவாடி கிராமத்தை சேர்ந்த 4 பேரிடமும், குப்பனத்தத்தை சேர்ந்த ஒருவரிடமும், மேல்ராவந்தவாடியை சேர்ந்த ஒருவரிடமும் என 6 பேரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். அந்த கடனை அவரால் திரும்ப செலுத்த முடியவில்லை.

இதனால் 6 பேரும் மணிவண்ணனை தினமும் அடித்து துன்புறுத்தியும், வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று இந்த முடிவிற்கு வந்ததாக தெரிவித்தனர்.

சமாதானம்

பின்னர் அவர்களை போலீசார் சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து மணிவண்ணன் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமை குறித்து மனு அளித்து விட்டு சென்றார்.

இந்த சம்பவத்தினால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story