ரெயில் முன்பாய்ந்து மாணவர் தற்கொலை : ஒரு கிலோ மீட்டர் தூரம் உடல் இழுத்து வரப்பட்ட சோகம்
ஒன்னாவர் அருகே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மாணவர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்து வரப்பட்ட சோகம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மங்களூரு,
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் ஒன்னாவர் அருகே ஆலாடிபுரா பகுதியை சேர்ந்தவர் விஜேஷா (வயது 16). இவரது தாய், தந்தை கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவரது சகோதரர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார்.
இத்தகைய சூழ்நிலையிலும் விஜேஷாவை அவரது பெற்றோர் படிக்க வைத்தனர். அவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். கடந்த 30-ந்தேதி கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் விஜேஷா தோல்வி அடைந்தார்.
இது, தங்களது குடும்பம் வறுமையில் இருப்பதால், விஜேஷா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தங்களது குடும்பத்தை காப்பாற்றுவார் என்று நினைத்த அவரது பெற்றோருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதனால் அவரை திட்டியதாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த விஜேஷா, ஆலாடிபுராவில் உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்று, அந்த வழியாக வந்த மும்பை-மங்களூரு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரது டீசர்ட் ரெயிலின் முன்பகுதியில் உள்ள ரெயில் பெட்டிகளை இணைக்க பொருத்தப்பட்டுள்ள கம்பியில் சிக்கியது. இருப்பினும் அவரது கால்கள் தண்டவாளத்தில் சிக்கி ரத்தம் வழிந்தபடி இருந்துள்ளது.
ஆனால் இதை கவனிக்காத டிரைவர் ரெயிலை இயக்கியபடி இருந்துள்ளார். இதனால் கால்களை இழந்த விஜேஷா ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் பரிதாபமாக செத்தார். இதற்கிடையே ஆலாடிபுராவில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒன்னாவர் ரெயில் நிலையத்திற்கு அந்த ரெயில் வந்தது. அதாவது அவரது உடல் ஒரு கிலோ மீட்டர் தூரம் ரெயிலில் சிக்கி இழுத்து வரப்பட்டது. அப்போது தான் ரெயில் முன் பாய்ந்து விஜேஷா தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை ஒன்னாவர் ரெயில்வே போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒன்னாவர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரித்தனர். விசாரணையில், குடும்பம் வறுமையில் இருந்த சூழ்நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்ததால், விஜேஷா ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஒன்னாவர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.