சுயேச்சை வேட்பாளர் சுமலதாவை காங்கிரசில் இருந்து பிரிக்க முடியுமா? செலுவராயசாமி கேள்வி
தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவை காங்கிரசில் இருந்து பிரிக்க முடியுமா? என்று செலுவராயசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு,
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. செலுவராயசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சமீபத்தில் மண்டியாவில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து நான் அதில் கலந்து கொண்டேன். அதேபோல் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவும் அதில் பங்கேற்றார். நாங்கள் அருகருகில் உட்கார்ந்திருந்தோம்.
அவர் அருகில் இருக்கிறார் என்பதற்காக நான் எழுந்து போக முடியுமா?. இந்த நிகழ்ச்சியில் நாங்கள் ஒன்றாக கலந்து கொண்டதை தீவிரமாக கருத தேவை இல்லை. நாங்கள் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்ட வீடியோ காட்சி முதல்-மந்திரியின் கைக்கு கிடைத்துள்ளது.
இதை அவர் தீவிரமாக கருத வேண்டிய அவசியம் என்ன?. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அந்த கண்காணிப்பு கோமராவில் பதிவான கட்சிகள், ஊடகங்களுக்கு கசிந்ததின் பின்னணியில் முதல்-மந்திரி இருக்கிறார் என்று நான் சொல்லமாட்டேன்.
நாங்கள் உணவு சாப்பிட்ட நிகழ்ச்சியை அவர் தீவிரமாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை. சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்யவில்லை. தேர்தலின்போது, சித்தராமையா எங்களுடன் ஆலோசனை நடத்தினார். ஒருவேளை அங்கு தேர்தல் முடிவு எதிராக வந்தால், அதற்கு சித்தராமையாவே பொறுப்பு.
துமகூருவில் தேவேகவுடாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அனைவரும் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றினர். மண்டியா தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய என்னை யாரும் அழைக்கவில்லை.
வேட்பாளர் தேர்வு செய்வதற்கு முன்பும் எங்களிடம் யாரும் கருத்துகளை கேட்கவில்லை. முதல்-மந்திரி குமாரசாமி, தாங்கள் பலமாக இருக்கிறோம் என்று நினைத்திருப்பார். நாடாளுமன்ற தேர்தலில் எங்களை பயன்படுத்திக்கொள்ளவில்லை.
மண்டியா காங்கிரசார் தான் ஜனதாதளம்(எஸ்) கட்சியினரிடம் போய் பேசினர். முதல்-மந்திரி உள்பட அவர்கள் யாரும் காங்கிரசாரிடம் பேசவில்லை. சுமலதாவுக்கு காங்கிரசில் டிக்கெட் கிடைக்கவில்லை. அதனால் அவர் சுயேச்சையாக போட்டியிட்டார்.
சுமலதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யக்கூடாது என்று எங்கள் கட்சி மேலிட தலைவர்கள் உத்தரவிட்டனர். அதன்படி நாங்கள் நடந்து கொண்டோம். நாங்கள் சுமலதாவுக்கு ஆதரவாக எங்கும் பிரசாரம் செய்யவில்லை. காங்கிரஸ் தொண்டர்கள் வந்து, யாருக்கு வாக்களிப்பது என்று எங்களிடம் வந்து கேட்டனர்.
உங்கள் விருப்பம் போல் முடிவு எடுத்துக்ெகாள்ளுங்கள் என்று கூறினோம். நாங்கள் யாருக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்யவில்லை. மசூதிக்கு சென்று சுமலதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக என் மீது புகார் கூறினர். அது தவறானது. நான் அவ்வாறு எந்த பிரசாரத்திலும் ஈடுபடவில்லை.
நாங்கள் கட்சியின் கட்டுப்பாட்டின்படி நடந்து கொண்டுள்ளோம். அதனால் எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமா? என்பது குறித்து மேலிடம் தான் முடிவு எடுக்க வேண்டும். கட்சி எந்த முடிவு எடுத்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். தேர்தலுக்கு பிறகு சுமலதாவிடம் பேசியதில் என்ன தவறு உள்ளது?. எங்களை குற்றவாளிகளை போல் பார்ப்பது சரியல்ல.
தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும், சுமலதாவை காங்கிரசில் இருந்து பிரிக்க முடியுமா?. ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடியாத இக்கட்டான நிலையில் நாங்கள் இருந்தோம். இதை தொடக்கத்திலேயே சரிசெய்திருக்க வேண்டும்.
ஆனால் அந்த முயற்சியை ஜனதாதளம் (எஸ்) மேற்கொள்ளவில்லை. எங்களுக்கு எதிராக முதல்-மந்திரியே காங்கிரஸ் மேலிடத்திடம் புகார் கொடுத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதை நாங்கள் வேண்டாம் என்று சொல்வது இல்லை. குமாரசாமி எவ்வளவு நாட்கள் காங்கிரஸ் கட்சியை தடுக்கிறார் என்று பார்க்கலாம். எங்களை உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். நாங்கள் என்ன பயங்கரவாதிகளா?.
இவ்வாறு செலுவராயசாமி கூறினார்.